பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209

பெருஞ் சேனைகளை அழித்த வீரத்தையும் ஆற்றலையும் காண்கிறோம். கவிச் சக்கரவர்த்தி இக் காண்டத்தில் நேர் எதிர் மாறான காட்சிகளை சித்தரிக்கிறார். ஊரினைச் சுற்றி இழுத்துச் செல்லப்பட்ட அநுமனுக்கும், இராவணனை சந்தித்த மாருதிக்கும், வாலில் எரியூட்டப் பெற்ற அஞ்சனையின் மைந்தனுக்கும், சூடாமணியை பிராட்டியிடமிருந்து பெற்ற அநுமனுக்கும் எத்தனை வித்தியாசம்! சீதையின் அறத்திற்கும் இராவணனின் மறத்திற்கும் உள்ள வேற்றுமையை எவ்வளவு அழகாகக் காட்டுகிறார் கம்பநாடார். பொழிலிறுத்த படலம் போருக்குத் துவக்கம். கிங்கரர், சம்புமாலி, பஞ்சசேனாபதிகள், அக்ஷயகுமாரன் ஆகியோரின் வதைப் படலங்கள்மூலம் இராம காதையை படிப்படியாக முன்னேறச் செய்கின்றான்.

11. பாசப் படலம்

இப் படலத்தில் இந்திரஜித்து அநுமனைப் பாசத்தால் கட்டினான். கட்டுப்பட்ட அநுமனுக்கு இது ஒரு வெற்றியே. அநுமனுக்கு இராவணன் வாலில் தீயூட்டினாலும், அது இலங்கைக்குத் தீயூட்டிய செய்கை அல்லவா?

12. பிணிவிடு படலம்

பாச படலத்துடன் போர் முடிவடைகிறது. அநுமன், இராவணனைக் காணவேண்டும் என்று விரும்பினான் இராவணனுக்கு இதுவரை தோல்வியே. தோல்வி கண்டறியாத இராவணன் தன் மகன் அக்ஷயகுமரனையும், சேனாபதிகளையும் இழந்தான். என்றாலும் ஆடம்பரத்தில் குறைச்சலில்லை. அநுமன் இராவணனின் இழிகுணத்தையும், இராகவனின் பரந்த குணத்தையும் ஒப்பிடும்போது இராவணன் சினங்கொண்டு சீறுகிறான். உடன் என்ன? தன் நகர் அழிவதற்குத் தானே வித்திடுகிறான். அநுமனின் வாலுக்குத் தீயூட்டுகிறான்.

கி,—14