பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

215



கும்பகன்னனைப் பற்றிக் கூறும்போது நம்முன் நிற்பான் மற்றொரு கொள்கை வீரன். அவன் இடம் பெறுவது இராமாயணத்தில் அல்ல; துரியோதனன் என்ற மானிடன் மண்ணாசையால் அழிந்த வரலாறான, மகாபாரதத்தில். நன்றிக் கடனைச் செலுத்த வேண்டி, தன்னை அழித்துக்கொண்ட கொடை வள்ளல் கர்ணனே அவன்.

சேது பாலம் உருபெற்று வருங்காலை பகைவனின் ஒற்றர்களுக்கும் கருணை காட்டுகிறான் இராகவன் இராகவனையும் இராவணனையும் எதிரெதிரே நிறுத்துகிறான் கம்பநாடன் இலங்கையின் வடக்கு வாயிற் கோபுரத்தின் மேல் அரக்கர்கோன்; வடதிசை வாயில் ஏன்? வடக்கு நோக்குதல் இந்து மதக் கொள்கைப்படி வீடு பெற்றுத் தரக்கூடிய திக்கு எதிரே நிற்பதோ இராமன்; அறத்தின் உருவம். அறம் வீடு அளிக்கும் என சூசகமாக தெரிவிக்கிறானோ கவிச் சக்கரவர்த்தி!

துர் நிமித்தங்கள், நல் சகுனங்கள் காண்கிறோம் ஒவ்வொரு படலத்திலும், ‘இன்று போய் நாளை வா’ என்று ஆயுதமேதும் இன்றி தனியனாய் நிற்கும் இலங்கேசனுக்கு இராமன் காட்டிய கருணைக்கு ஒப்புவமையுண்டோ?

இலட்சுமணனை மகவு கொண்டு போய் மாம்புகு மந்தி. அநுமனின் திறமையைக் கண்டு வியக்கிறோம். மாயங்கள் பல செய்யும் அரக்கர் திறன் தானென்ன! அதன் விளைவு நிலைப்பதில்லையே! ஆனால் மறத்தினாலும் நன்மை விளைவதுண்டு! இல்லையெனில் நாகபாசம் என்ற மிகச் சிறந்த பகுதி யுத்த காண்டத்தில் இடம்பெறுமா? இல்லை, மருத்து மலையைத்தான் அநுமன் தூக்கி வந்திருப்பானோ? அக் கால போர்க் காட்சிகளையும் உத்திகளையும் நம் மனக்கண்முன் நாடகமாக அல்லவா ஆக்கிக் காட்டுகிறான் கம்பன். இந்திரசித்து சிறந்த வில்லாளனாக இருந்தும், முறைகேடுகள் மேற்கொண்டாலும், கடைசியில் நேர்மையே வெல்கிறது.