பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

227

அவர்களால் உன்னைக் கொல்ல முடியாது என்ற வரத்தை நீ பெற்றிருப்பது உண்மையே. எனினும் மானிடராய் பிறந்துள்ள இராம இலட்சுமணன் இந்த விதிக்கு விலக்காக மாட்டாரோ என்று விபீடணன் மேலும் கூறிக்கொண்டு போவதைக் கேட்டு இராவணன் கோபத்துடன் சீறுகிறான். தான் தேவர்களை வென்றது தன் சொந்த வலிமையால், எவருடைய வரத்தினாலும் அன்று, எவருடைய சாபமும் தன்னை தீண்டாது என்கிறான் ஆணவத்தோடு. யார்? இராவணன். இராமனுக்கு ஏற்பட்ட தாழ்ந்த நிலைமையை எள்ளி நகையாடுகிறான்.

***

இசையும் செல்வமும் உயர்குலத்து
        இயற்கையும் எஞ்ச
வசையும் கீழ்மையும் மீக்கொளக்,
        கிளையொடும் மடியாது
அசைவு இல் கற்பின் அவ் அணங்கை
        விட்ட ருளுதி; இதன்மேல்
விசையம் இல் எனச் சொல்லினன்
       அறிஞரின் மிக்கான்.

"உனது புகழும், செல்வமும் உயர்குலப் பண்பும் அழிய, பழிப்பும், தாழ்வும் மேலோங்க உனது சுற்றத்தாருடன் மாண்டு போகாமல் மாசற்ற கற்புடையளாகிய சீதையை விட்டுவிடு. இதற்குமேல் வெற்றிதரும் செயல் எதுவுமில்லை. இதற்கு மேற்பட்ட விஷயம் எதுவுமில்லை." என்றான் அறிஞரில் சிறந்த விபீடணன்.

***

இசையும் - உனது புகழும்; செல்வமும் - செல்வச் சிறப்பும்; உயர்குலத்து இயற்கையும் - உயர் குலப்பிறப்பிற்குரிய இயல்பும்; எஞ்சி-அழிய வசையும் - பழிப்பும்;