பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231

எய்துவான் - அழிவு அடையும் பொருட்டு; அறிவு நீங்கினான் - அறிவு நீங்கப் பெற்ற இராவணன்.

***

விபீடணன் வானத்து எழுகிறான். மீண்டும் கூறுகிறான்;

“நீ வாழ நினைத்தால், இராமனின் திருவடிகளில் விழுந்து மன்னிப்புக் கேள், இல்லையெனின் அப்பிரானுடைய அம்பு உன்னையும், உன்னைச் சேர்ந்த அனைவரையும் அழித்துவிடும். என் குற்றத்தைப் பொறுத்தருள்க!” என இலங்கை விட்டு நீங்கினான்.

***

“எத்துணை வகையாயினும்
        உறுதி எய்தின,
ஒத்தன, உணர்த்தினேன்;
        உணரகிற்றலை;
அத்த! என் பிழை
        பொறுத்தருளுவாய்” என,
உத்தமன் அந் நகர்
        ஒழியப் போயினான்.

“எல்லா வகையாலும் உறுதி பொருந்தியனவும் நீதி நூற்கு ஒத்தனவுமான கருத்துக்களை எல்லாம் உனக்கு உணர்த்தினேன். ஆனால், அவற்றை நீ உணரும் ஆற்றல் அற்றவன் ஆனாய்; என் தந்தைப் போன்றவனே! (பெரியோனாகிய உனக்கு அறிவுரை கூறிய) என் பிழையைப் பொறுத் தருள்வாயாக!” என்று கூறிவிட்டுச் சிறந்த குண நலன்களை உடைய விபீடணன் அந்த இலங்கை நகரத்தை விடுத்துச் சென்றான்.

***