பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

பொருந்த நோக்கி ஆராய்ந்து சொல்வீர்களாக” என்று பணிந்தான்.

***

அப்போது மயிந்தன் கூறிய சொற்களைக் கேட்ட போது; இராமனும் அருகில் நண்பரை - இராமபிரானும் (தம் அண்மையில் அமர்ந்திருந்த) துணை வரைப் பார்த்து: 'இப் பொருள் கேட்ட நீர் - இப்போது நடைபெற்ற செய்திகளைக் (மயிந்தன் வாய் மொழியாற்) செவியேற்ற நீங்கள்: கை புகல் பாலனோ - இந்த விபீட்ணன் நம்மிடம் புகுதற்கு உரியவனோ? அல்லது, கழியல் பாலனோ - அப்பால் சென்றிடற்கே உரியவனோ?; நும் உணர்வினால் - உங்கள் அறிவினால்: ஒப்புற நோக்கி - நடுவர் நிலைக்கேற்ப ஆராய்ந்து; இயம்புவீர் என்றான் - உரைப்பீர்களாக என்று சொன்னான்.

***

வெம் முனை விளைதலின் அன்று;
       வேறு ஒரு
சும்மையான் உயிர் கொளத்
       துணிதலால் அன்று;
தம் முனைத் துறந்தது,
        தரும நீதியோ?
செம்மை இல் அரக்கரில்
        யாவர் சீரியோர்?

விபீடணன் தன் தமையனைத் துறந்து வந்தது, அந்த இராவணனோடு தனக்குக் கொடிய போர் விளைந்தாலும் அன்று; அவனைக் கொல்ல நினைத்து. அவன் அண்ணன் இராவணன் வேறு எந்த அடாத செயலையும் செய்யவில்லை. இத்தகைய பெரிய காரணங்கள் ஏதும் நிகழாத போது, தன்னுடன் பிறந்த அண்ணனை துறந்து வந்தது