பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248



பிறப்பு இறப்பு ஆகிய இரட்டைகளிலிருந்து தனக்கு விடுதலை வேண்டுமென இராமனின் பாதங்களைப் பற்றினான் என்பது உட்கருத்து.

இதை அறிந்த இராமன், விபீடணனை நோக்கிக் கூறினான்:

***


“குகனொடும் ஐவர் ஆனேம்
       முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்;
       எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
        நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலரும் கானம் தந்து,
        புதல்வரால் பொலிந்தான் நுந்தை.”

“ஆதியில் தசரத சக்கரவர்த்திக்கு நாங்கள் நால்வரே பிள்ளைகளாய் பிறந்தோம்; குகனொடு ஐவர் ஆனோம்; சுக்கிரீவனொடு அறுவர் ஆனோம்; உன்னுடன் எழுவர் ஆனோம். எனக்குக் காடு கொடுத்ததால் புதல்வர் எழுவரைப் பெற்று விளங்கினான் உன் தந்தை” என்றான்.

***

எம்முழை அன்பின் வந்த - எம்மிடத்திலே அன்போடு வந்த; அகன் அமர் காதல் ஐய - உள்ளன்பு கொண்ட ஐய; முன்பு - முதலில்; குகனொடும் ஐவர் ஆனேம் - குகன் எங்களோடு வந்து சேர்ந்ததால் நாங்கள் உடன் பிறந்தோர் ஐவர் ஆனோம்; பின் - அப்பால்; குன்று சூழ்வான் - மலையைச் சுற்றிவரும் சூரியன்; மகனொடும் - மகனாகிய சுக்கிரீவனொடும்; அறுவரானோம் - நாம் அறுவர் ஆனோம்; நின்னொடும் எழுவர் ஆனேம் - உன்னோடு எழுவர் ஆனோம்; உந்தை - உனது தந்தையாகிய