பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

265


வாலியின் மைந்தன் அங்கதன்தான் இராமனின் தூதன் என்றறிந்த உடனே இலங்காதிபன் மிகவும் நயமாக அங்கதனை தன் பக்கம் ஈர்க்க முயற்சி செய்கிறான்.

அவன் இராமனின் தூதுவனாக இருப்பது மாபெரும் தவறு என்னும்படியும், அங்கதனின் மனத்தைக் கலைக்கப் பார்க்கிறான். ஏன்? தன் தந்தை வாலியைக் கொன்றவனுக்கு பணி செய்வது பெருங் குற்றமன்றோ?

சுருக்கமாக இராமனிடம் இருந்து அங்கதனைப் பிரிக்கப் பார்க்கிறான் இலங்கை வேந்தன்.

***

‘உந்தை என் துணைவன் அன்றே
        ஓங்கு அறஞ் சான்றும் உண்டால்
நிந்தனை இதன்மேல் உண்டோ?
        நீ அவன் தூதன் ஆதல்
தந்தனன் நினக்கு யானே
        வானரத் தலைமை; தாழா
வந்தனை நன்று செய்தாய்
        என்னுடைய மைந்த!’ என்றான்.

“அடடா! உன் தந்தை எனது துணைவன் அல்லவா! இதற்குத் தக்க சாட்சியும் உண்டே! நீ போய் இராமனுக்குத் தூது வரலாமோ? இதைவிடப் பழி வேறுண்டோ? வா! எனது மகனே! நானே உனக்கு வானரத் தலைமை தந்தேன். கால தாமதம் செய்யாமல் வந்தாய்!” என்றான்.

***

உந்தை என் துணைவன் அன்றே - உனது தந்தை எனது நண்பன் அல்லவா! ஓங்கு அறம் சான்றும் உண்டு - இதற்கு அறக்கடவுளாகிய அக்கினி சாட்சியும் உண்டு; (அப்படி எனது நண்பனாய் மகா வீரனாய் இருந்த வாலியின்