பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

285


அவ்வமயம் கருடன் அங்கு வந்து இராமனை வணங்குகிறான். கருடன் வருகையால் பிணி நீங்கி அனைவரும் உயிர் பெற்று எழுந்தவுடன் வானரர்கள் ஆரவாரம் செய்கின்றனர். போருக்குச் செல்ல அரக்கர் துடிக்க,இராவணன் பாரிசுவ, தூமிராட்சனை முதன்மை படைத்தலைவனாக்குகிறான். அதே நேரம் இந்திரசித்தை தனியே விட்டுவிட்டு அவர்கள் ஓடி வந்து விட்டதை ஒற்றர்கள் கூறுகின்றனர். இராவணன் கடுங்கோபமுற்று அவர்களது மூக்கை அறுக்கும்படி ஆணையிடுகிறான். ஆனால், மாலியன் இதைத் தடுக்கவே இராவணன் மனம் மாறினான். பத்து வெள்ளஞ்சேனையுடனே யக்ஞசத்துரு, சூரியசத்துரு ஆகியவர்களையும் இராவணன் ஏவுகிறான்.

விபீடணன் இராமபிரானுக்குப் படைத்தலைவர்கள் ஒவ்வொருவரையும் காட்டி விவரங்கள் கூறுகிறான். வானர சேனைக்கும் அரக்கர் படைக்கும் கடும்போர் நடக்கிறது. இப்போரில் துமிராட்சன் அநுமனுடன் பொருகிறான். மகாபாரிசுவன் அங்கதனை எதிர்க்கிறான்; மாலிநீலனுடனும், யக்ஞசத்துரு இளையவனுடனும், வச்சிரதந்தன் விருசபனுடனும் கடும்போர் செய்கின்றனர்.

வானரச் சேனையர் ஆறு வெள்ளம் அரக்கர்ச் சேனையை மாய்த்தனர். லட்சுமணன் மீதி நாலு வெள்ளம் அரக்கர் சேனையை அழித்தான். இரவு கழிந்து மறுநாள் போர் இன்னும் மும்முரமாக நடந்தது. அநுமன் துமிராட்சனைத் தரையில் தள்ளினான்; உதைத்தான்; அவன் தலைகளைக் கிள்ளினான்; அவைகளைக் கடலில் எறிந்த பின்னரே கோபந்தணிந்தான்.

அரக்கன் மகாபாரிசுவன் அங்கதன் மீது ஏராளமான அம்புகளை எய்தான்; உடன் அங்கதன் என்ன செய்தான்? அரக்கனது வில்லைமுறித்தான்; தேருடனே வானத்தின் மீது எறிந்தான். அரக்கனோ தேரினின்று இறங்கி, சூலத்தை அங்கதன் மீது எறிந்தான். இதைக் கண்ட இராமன் தன்