பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

சிறந்த; தோள் வலயத்தின் வயங்கு காசு - தோள் வளையல்களில் விளங்கிய ரத்தினங்கள்; தடித்து வீழ்ந்தன என - மின்னல்கள் சிதறி வீழ்ந்தன என்று சொல்லும் படியாக; தகர்ந்து சிந்தின - சிதறி விழுந்தன.

***


ஞாலமும் நாற்றிசைப்
        புனலும் நாகரும்
மூலமும் முற்றிட
        முடிவில் தீக்கும் அக்
காலமும் ஒத்தனன்
        கடலில் தான் கடை
ஆலமும் ஒத்தனன்
        எவரும் அஞ்சவே

வாலி எப்படி இருந்தான்? பூமியும், கடலும், தேவரும், மூல தத்துவப் பொருள்களும் அழிந்துபோக யுக முடிவில் எரிக்கும் அந்தக் காலாக்கினிபோல் இருந்தான். பாற்கடலில் தோன்றிய ஆல கால விடம்போல் இருந்தான்.


***

ஞாலமும் - பூமியும்; நாற்றிசையும் - நான்கு திக்குகளிலும் உள்ள புனலும் - கடலும்; நாகரும் - தேவரும்: மூலமும் - மூல தத்துவப் பொருள்களும்; முற்றிட - அழிந்து போக; முடிவில் - யுக முடிவில்: தீக்கும்- எரிக்கும்: அக்காலமும் ஒத்தனன் -அந்தக் காலாக்கினி போலானான்; கடலில் - பாற்கடலில்; தான் கடை ஆலமும் ஒத்தனன் - அவன் கடைந்தபோது எழுந்த ஆல கால விடமும் போன்றான்.


***

அவ்வாறு சினந்து எழுந்த வாலியைத் தடுக்கிறாள் அவனது மனைவி தாரை. வாலியின் கண்களினின்று