பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

301

இன்னும் வலுப்படுத்துகிறது. ‘பழிக்குப் பழி; தனயனின் குருதிக்கு அயோத்தி மைந்தர்கள் குருதி’ என்று போருக்கு எழுகிறான் இலங்காதிபன். படைகளைத் திரட்டுகிறான். மானிடர் இருவரையும் வானரரையும் அழிக்க. இதை கம்பன் எவ்வாறு வர்ணிக்கிறார் தெரியுமா?


“அறத்தைத் தின்று அருங்கருணையைப்
        பருகி வேறமைந்த,
மறத்தைப் பூண்டு வெம்பாவத்தை
        மணம் புணர் மணாளா!”

இம் மாபெருஞ் சேனையைக் கண்டு வானரங்கள் அஞ்சி ஓடின. இப்படைகள் வந்ததெவ்வாறு என்று விபீடணன் இராமனிடம் விளக்குகிறான். அங்கதன் ஓடிய வானரங்களை அழைத்து வருகிறான். சாம்பன் அஞ்சியோடிய குரங்குகட்கு பரிந்து பேசுகிறான். சாம்பனை அங்கதன் தேற்ற, லட்சுமணனை ஓடும் சேனையைக் காக்கச் சொல்கிறான் இராமன்.


“மாருதியோடு நீயும் சுக்கிரீவனும்
        சேனை காக்கப் போருதி”

என்ற அண்ணனின் சொல்லுக்குக் கட்டுபடுகிறான்' லட்சுமணன்.

இராமன் தனியனாய் மூல பல படையுடன்[1] பொருகிறான். இருதிறத்தார்க்கும் பெரும்போர் நடக்கிறது. இராமபிரானின் அம்புகள் அவர்களை அழிக்கின்றன. எவ்வளவோ வெள்ளச் சேனைகள், எங்கிருந்து வந்தாலும், அவர்கள் அனைவரையும் அழிக்கிறது இராமனின் வில். அரக்கர் தேவ படைகள் விடுகின்றனர். இராமன் தேவர்-


  1. மூல - என்பது தொன்றுதொட்டு வருஞ்சேனை. பல - என்பது படை பலம்: மூல படை தவிர ஏனைய படைகள்: நாட்டுப் படை, காட்டுப் படை, துணைப்படை, பகைப் படை, கூலிப்படை. ஆக ஆறு வகைப் படைகள்.