பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

321

கருவிகள்: மழைபடு துளியின் பான்மைய - மேகத்தினின்றும் விழும் துளிகளின் தன்மையவாயின.

***

தேர்கள் இலங்கையை அணுகின. இராமனின் இரதத்து இடிக்கொடியை அறுத்து சிதைத்து, கடலில் விழச் செய்தான் இராவணன். தொடர்ந்து நடந்த கடும் போரில், மாதலியின் மார்பினில் அம்பு செலுத்தினான் அரக்கன். வருந்தினான் இராமன். அவனை அம்புகளைக் கொண்டு மறைத்தான் இலங்கை வேந்தன். ஆனால் இராமனோ இராவணன் மீது அம்புகளை எய்தான். அவை அவனை வருத்தியதோடு அல்லாமல், அவன் தேர்க்கொடியையும் அழித்தன.

***

தூணுடை நிரை புரை கரம்
        அவை தொறும் அக்
கோணுடை மலை நிகர் சிலை
        இடை குறைய,
சேணுடை நிகர் கணை
        சிதறினன்-உணர்வொடு
ஊணுடை உயிர்தொறும்
        உறைவுறும் ஒருவன்.

இராமபிரான் இராவணன் எய்த சரங்களைக் கொய்தான். அந்த இலங்கை வேந்தன் மீது பல அம்புகளை எய்து நோவச் செய்தான். அது மட்டுமா? இலங்காதிபதி, தன் பத்து கைகளில் பிடித்திருந்த மலைகளை ஒத்த வில்களையும் தன் சிறந்த அம்பினால் துண்டுபடும்படி செய்தான். இதைச் செய்தவன் யார்? ஞானிகளின் ஆன்மாக்களில் மிக்க மகிழ்ச்சியுடன் உறைந்துள்ள இராமன் என்ற பரம்பொருள்.

***

கி.ー21