பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

இருமையே - இம்மைக்கும் மறுமைக்கும் பயன்தரும் புகழும் புண்ணியமும்; பேர்கிலாது - பிறழாமல்; அரசாளுதி - இலங்கா இராச்சியத்தை அரசாள்வாய்; என்றான்.


இப்பு றத்தின வெய்துறு காலையில்
        அப்பு றத்ததை யுன்னி அனுமனைத்
துப்பு உறச் செய்ய வாய் மணித் தோகைபால்
        செப்பு உறு இப்படிப் போயெனச் செப்பினான்

அநுமனை நோக்கினான் அண்ணல். “அழகிய மயில் போன்ற சாயலுடையவளான பிராட்டியினிடம் இங்கு நடந்த செய்திகளைச் சொல்வாயாக!” என்று சொல்லி அநுமனை அன்னையிடம் அனுப்பினான்.

***

இ புறத்து - இந்தப் பக்கத்தில்: இன - இப்படிப்பட்ட செயல்கள்; எய்துறு காலையில் - நிகழா நின்ற போதில்; அ புறத்தை - அப்பால் நடைபெற வேண்டியதை; உன்னி - ஆராய்ந்து; அநுமனை - மாருதியை (நோக்கி); துப்பு உறு அ செய்ய வாய் மணி தோகை பால் - பவளம் போன்ற அந்த சிவந்த வாயையுடைய அழகிய மயில் போன்ற சாயலளான பிராட்டியினிடம்; இ படி போய் - இங்கு நடந்த செய்திகளை; செப்பு உறு - சொல்வாயாக; என - என்று; செப்பினான் - சொல்லினான்.

***

அநுமன் பிராட்டியை அடைந்தான். தொழுதான் அன்னையை. செய்தியையும் சொன்னான். பிராட்டியும் மகிழ்ந்தாள். ஆனால், அப்பெரு மகிழ்ச்சியில் பேச முடியாது தவித்தாள். அன்னையை அண்ணலைக் காணவேண்டி அழைத்துச் செல்ல வருகிறான் விபீடணன்.