பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

மறுநாளே, முடிசூட்டு விழா நாளும் ஓரையும் ஆராய்ந்து ஓலை தீட்டி அனைவருக்கும் அனுப்புகின்றனர்.

பளிங்கு மாடத்தில் அண்ணலும் அன்னையும் பீடத்தில் அமர்ந்திருக்கும் கண்கொளாக் காட்சியைக் காண திரள்கிறது மூவுலகும். விழா ஆரம்பிக்கிறது. அபிஷேகம் முடிகிறது. பின்?

***


அரியணை அநுமன் தாங்க
        அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க
        இருவரும் கவரி வீச
விரை செறி கமலத்தாள் சேர்
        வெண்ணெயூர் சடையன் தன்
மரபுளோர் கொடுக்க வாங்கி
        வசிட்டனே புனைந்தான் மெளலி

***

இந்த விழாவிலே அரியணையை அநுமன் தாங்குகிறான்; அங்கதன் உடைவாளைப் பற்றுகிறான். பரதன் வெண்குடை பிடிக்கிறான். மற்ற இரு சகோதரர்களும் சாமரம் வீச, அப்போது சடையப்ப வள்ளலின் முன்னோர் எடுத்து கொடுக்க வசிட்டன், இராமனுக்குப் புனைந்தான் மெளலி.

***

அரியணை - சிங்காதனத்தை; அநுமன் தாங்க - அநுமன் தாங்கவும்; அங்கதன் உடைவாள் ஏந்த - அங்கதன் உடைவாள் ஏந்தி நிற்கவும்; பரதன் வெண்குடை கவிக்க - பரதன் பூச்சக்கரக் குடை பிடிக்கவும்; இருவரும் - மற்ற சகோதரர் இருவரும்; கவரி வீச - சாமரை வீசவும்;