பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

5. துந்துபிப் படலம்

துந்துபியின் உடலைக் காண்கிறான் இராமன். அதன் வரலாற்றை அறிகிறான். லட்சுமணன் துந்துபியின் உடலை உந்தி தள்ளுகிறான்.

6. கலன்காண் படலம்

இராமனிடம் சில செய்திகளைத் தெரிவிக்கிறான் சுக்கிரீவன். சீதையின் அணிகலன்களைக் கண்ட இராமன் மிகவும் வருந்துகிறான்.

“நின் குறை முடித்தன்றி வேறு யாதும் செய்கிலேன்' எனக் சுக்கிரீவனிடம் கூறிய இராமனிடம் பேசுகிறான் அனுமன். பின் அனைவரும் வாலியிருக்குமிடத்திற்குச் செல்கின்றனர்.

7. வாலி வதைப் படலம்

வாலியிருந்த மலையருகே சென்ற இராமனும் மற்றவரும் இனி செய்ய வேண்டியதாகக் குறித்து ஆலோசிக்கின்றனர். இராமனின் சொல்படி சுக்கிரீவன் வாலியைப் போருக்கு அழைக்கிறான். தாரை வாலியைத் தடுக்கிறாள். எனினும் போரை விரும்பி வாலி குன்று புறத்தே வருகிறான் வாலி சுக்ரீவனிடையே இருந்த உருவ ஒற்றுமை இராகவனை வியப்படையச் செய்கிறது. சுக்ரீவனை இராமன் கொடிப்பூ மாலை அணிந்து போர் செய்யும்படி கூறுகிறான். சுக்ரீவனை மேலே தூக்கி எறிய வாலி முற்படும்போது இராமனின் அம்பு அவனைத் தாக்கித் துரத்துகிறது. வாலியின் மார்பில் பாய்ந்து, அம்பு அவனை வீழ்த்தியது. அம்பைப் பறித்த வாலி, அது இராமனுடையதென்று அறிகிறான். இராமனை மறைந்து அம்பு எய்தது வீரனுக்கு அழகோ என்று இகழ்கிறான் வாலி. இராமன் தன் செய்கை சரியே என்று வாதாடினாலும் வாலி ஒப்புக்கொள்ளவில்லை. லட்சுமணன் தன் அண்ணன் அம்பு எய்தது சரியே என்று ஆதாரத்துடன் விளக்க, வாலி மனம் மாறி சுக்ரீவனையும் தன் மகன் அங்கதனையும் இராமனிடம் ஒப்படைக்கிறான்.