பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

ம்பராமாயணம் ஆறு காண்டங்கள் கொண்ட காவியம். இந்த ஆறு காண்டங்களும் முறையே பால காண்டம் அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்பன ஆகும். இந்த ஆறு காண்டங்களில் ஐந்தாவதாகத் திகழ்வது சுந்தர காண்டம்.

சீதா தேவியைத் தேடிக்கொண்டு, தென்திசை நோக்கிச் சென்ற வானர வீரர்களுள் ஒருவன் அநுமன். அவன் மகேந்திரமலையின் மீது ஏறி நின்று இலங்கையைக் காண்கின்றான். தோள்கொட்டி ஆரவாரம் செய்கிறான். கடலைத் தாவுகிறான். இலங்கை சேருகிறான்.

இலங்கை என்பது தென்கடலிடையே திரிகூட மலையின் மீது அமைக்கப்பட்டிருந்த நகரம். இராவணன் என்னும் அரக்கர் வேந்தின் அரசிருக்கை. இந்த நகரம் குபேரனுடையது தெய்வ தச்சனாகிய விசுவகருமனால் கட்டப்பட்டது. பின்னே இராவணனால் கைக்கொள்ளப்பட்டது. இதை ஒரு பெரும் போக பூமியாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் கம்பர்.

மாலைக் காலம் முதல் நள்ளிரவு வரையில் அந்த இலங்கை மாநகரிலே சீதாபிராட்டியைத் தேடி அலைகிறான் அநுமன்.

பன்னிரண்டு யோசனை விஸ்தீரணமும் மும்மை நூறாயிரம் தெருக்களும் கொண்ட அந்நகரின் ஒவ்வொரு பகுதியையும் காண்கிறான் அநுமன்.