பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


இராவணனைக் காண்கிறான்; மண்டோதரியைக் காண்கிறான்; இந்திரஜித்தனைக் காண்கிறான்; கும்பகருணனைக் காண்கிறான்; விபீஷணனைக் காண்கிறான். எங்கும் சீதாபிராட்டியைக் காணாமல் ஏங்கினான்; மனம் சோர்வடைகிறான். அந்நிலையில் அசோக வனத்துள் நுழைகிறான்; சீதையைக் காண்கிறான்; மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கிறான்.

காமன் தன் கணைகளுக்கு இலக்கான இராவணன் சீதை இருந்த அசோக வனத்துக்கு வருகிறான். அவனுடைய வருகையைக் கம்பர் மிக அழகாக வர்ணிக்கிறார். பிராட்டி தன் மீது இரங்க வேண்டும் என்று வேண்டுகிறான் இராவணன். அப்பொழுது பிராட்டி அவனுக்கு அறவுரை கூறுகிறாள்; இராமனின் ஆற்றலை எடுத்துரைக்கிறாள். சீதையின் அறவுரை கேட்டுச் சினம் கொள்கிறான் இராவணன். பிராட்டியைப் பலவாறு அச்சுறுத்துகிறான். பிராட்டியின் மனத்தை மாற்றுமாறு அரக்கியர்க்கு ஆணையிட்டுச் செல்கிறான். இவ்வளவையும் ஒருபால் ஒதுங்கி இருந்து காண்கிறான் அநுமன்.

சீதா பிராட்டி ஏங்கி மனமுடைந்து உயிர்விட முயலும் தருவாயில் அவள்முன் தோன்றுகிறான் அநுமன்.

இராமன் கொடுத்த கணையாழியை அளிக்கிறான். ஆறுதல் மொழிகள் பல கூறுகிறான். பின்னே தான் சீதையைக் கண்டதற்கு அடையாளமாக அப்பிராட்டி அளித்த சூடாமணியைப் பெறுகிறான்.

அசோக வனத்தை அழித்து இலங்கையை எரியூட்டி மீண்டும் கடலைக் கடந்து வானர சேனைகளுடன் வந்து இராமனை வணங்குகிறான். சீதாதேவியைக் கண்ட செய்தி கூறுகிறான். அடையாளமாகத் தேவி கொடுத்த சூடாமணியை இராமனிடம் அளிக்கிறான் அநுமன்.