பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் சுமார் 1350 பாடல்களால் விவரிக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். இப்பாடல்களைப் படிக்கும்போது நாம் என்ன காண்கிறோம்? நிகழ்ச்சிகள் கண் எதிரே நடப்பனபோல் காண்கிறோம். நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் படம் பிடித்துக் காட்டுகிறார் கம்பர்.

இவற்றிலிருந்து சில பாடல்களைத் திரட்டி இச்சிறு புத்தகத்தில் அளித்திருக்கிறோம்.

கம்பனின் கவியிலே இன்பம் காண விரும்புவார்க்கு இஃது ஓரளவு துணை புரியும் என நினைக்கிறோம்.

இன்றைய வாழ்க்கை, வேகம் நிரம்பிய ஒன்று. வேகம்! வேகம்! எங்கும் வேகம்! எதிலும் வேகம்! வேகம் நிறைந்த வாழ்விலே ஓய்வு ஏது? ஓய்வு கிடைப்பது அருமை. எனவே, சிறிது ஓய்வு கிடைக்கும் போது கம்பன் கவியின்பம் காண விரும்புவார், என்ன செய்வார்? கம்பராமாயணப் பாடல் எல்லாவற்றையும் படித்தல் இயலுமோ? இயலாது; இயலாது.

ஆகவே, கிடைத்தற்கரிய ஓய்வு நேரத்தில் சில கவிகளையேனும் படிக்க ஆவல் கொண்டார்க்கு இச்சிறு திரட்டு பெரிதும் பயன்படும். இந்த நோக்கில் தான் இத்திரட்டு வெளியிடப்படுகிறது. இவர்களையே கருத்தில் கொண்டு பாடல்கள் சந்தி பிரித்துத் தெளிவாகக் கொடுக்கப் பட்டுள்ளன. பாடல்களின் கருத்தும், விளக்கமும், பதவுரையும் தரப்பட்டுள்ளன.

ஓரளவு தமிழ்ப் பயிற்சியுடையாரும் எளிதில் படித்து விளங்கிக் கொள்ளும் வகையில் இத்திரட்டு வெளியிடப்படுகிறது.

கம்பராமாயணத்தின்பால் பற்றுடையோர் பலரும், எங்களுக்கு ஆக்கம் தந்து இம்முயற்சியில் எங்களை ஊக்குவிக்க வேண்டுகிறோம்.

தொகுப்பாசிரியர்கள்