பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கண்ணாடி வைத்தது போன்ற, இலங்கையை - இலங்காபுரியை; தெரியக் கண்டான் - நேரே தெரியப் பார்த்தான்.


பொன் கொண்டு இழைத்த
        மணியைக் கொடு பொதிந்த
மின் கொண்டமைத்த
        வெயிலைக் கொடு சமைத்த
என் கொண்டு இயற்றிய
        எனத் தெரிவிலாத
வன் கொண்டல் விட்டு
        மதி முட்டுவன மாடம்.

இந்த இலங்காபுரி “எதனால் கட்டப்பட்டது? பொன்னால் இழைக்கப்பட்டதோ? இரத்தினங்கள் பொதிக்கப்பட்டதோ? மின்னலால் அமைக்கப்பட்டதோ? என்ன என்று விளங்கவில்லையே! இந்த மாடங்கள் எல்லாம் மதிமுட்டுகின்றனவே!” என்று அதிசயித்தான் அநுமன்.

***

மாடம் - (இந்த இலங்கை மாநகரின் விதிகளில் காணும்) மாடங்கள்; பொன் கொண்டு இழைத்த - பொன் கொண்டு செய்யப்பட்டன; மணியைக் கொடு பொதிந்த - இரத்தினங்களைக் கொண்டு பொதிந்த மின் கொண்டு அமைத்த - மின்னலைக் கொண்டு அமைக்கப் பெற்றன; வெயிலைக் கொடு சமைத்த - சூரிய ஒளியைக் கொண்டு ஆக்கப் பெற்றன; (என்று இவ்வாறு மயங்குவது அல்லாது) என் கொண்டு இயற்றின என - எதனைக் கொண்டு செய்யப்பட்டன என்று தெரிவு இலாத - அறிய முடியாதன வாயிருக்கின்றன; (அவை) வன்கொண்டல் விட்டு - வலிய மேக மண்டலத்தைக் கடந்து; மதிமுட்டுவன - சந்திர மண்டலத்தை முட்டிக் கொண்டிருக்கின்றன.

***