பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

யால்; புறம்போய் - அப்பால் சென்று; நேர் இயன்றவன் திசை தொறும் - நேராக உள்ள வலிய திசைகள் தோறும்; நின்றமா - நின்ற திக்கு யானைகள்; நிற்க - ஒருபுறம் நிற்க; ஆரியன் - ஐயனாராகிய சாஸ்தாவின்; தனி தெய்வ மா களிறும் - ஒப்பற்ற தெய்வத் தன்மை வாய்ந்த வாகனமான யானையும்; சூரியன் - சூரியனுடைய; ஓர் ஆழி தனிதேருமே. ஒரே சக்கரங்கொண்ட ஒப்பற்ற தேருமே; இந்நகர் - இந்த இலங்காபுரியில்; தொகாத - சேராதன; (பிற யானைகளும் தேர்களும் இங்கே உள்ளன என்றபடி)

***


வாழும் மன்னுயிர் யாவையும்
        ஒரு வழி வாழும்
ஊழிநாயகன் திருவயிறு
        ஒத்துளது இவ்வூர்!
ஆழி அண்டத்தின் அருக்கன் தன்
        அலங்கு தேர்ப் புரவி
ஏழும் அல்லன ஈண்டுள
        குதிரைகள் எல்லாம்!

ஏழு குதிரைகள் பூட்டப்பெற்ற தேரிலே பவனி வருகிறான் சூரியன். அந்த ஏழு குதிரைகள் நீங்க மற்று எல்லாக் குதிரைகளும் இந்த இலங்கை மாநகரில் உள்ளன.

சுருங்கச் சொன்னால், ஊழிக் காலத்திலே இந்த உலகத்துயிர்கள் எல்லாம் சரணடைந்திருக்கும் திருமாலின் திருவயிறுபோல் இருந்தது இலங்கை மா நகரம்.

***

இவ்வூர் - இந்த இலங்கை மா நகரமானது; வாழும் மன்னுயிர் யாவையும் - உலகில் வாழும் நிலை பெற்ற உயிர்கள் எல்லாம்; ஒருவழி வாழும் - ஓரிடத்தில் கூடி