பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

99


உங்கள் உள்ளத்தில் நான் தூண்டியிருந்தால் என் முயற்சியில் வெற்றி பெற்றவனாவேன்.

இன்னும் எத்தனையோ ராமர்களைக் கண்டிருக்கிறேன், இந்தக் காவிரிக்கரையில். கடைசியில் பெறுதற்கரிய பெரும் பேறு பெற அந்த ஒப்பிலிஅப்பன் சந்நதிக்கே வந்தேன். அர்ச்சகரை அர்ச்சனை ஒன்று செய்யச் சொன்னேன். பெருமாளின் கல்யாண குணங்களை எல்லாம் அடுக்கடுக்காய்ச் சொல்லிக் கொண்டு வந்தவர், ‘காவிரி தீர ரஸிகாய நமா ஓம்’ என்றும் அர்ச்சித்தார். என்ன அழகான பட்டம். கங்கைக் கரையில் பிறந்து காவிரி தீரத்தைத் தேடிவந்த இந்தக் காவிய நாயகனை காவிரி தீர ரஸிகன் என்று அழைக்காமல் வேறு என்ன பெயரிட்டு அழைப்பது. ஆம். இந்தக் காவிரி தீர ரஸிகனை உருவாக்கியவன் அந்தக் காவிரி தீர ரஸிகமணியான கம்பன்தானே. மேலும் காவிரிதீர ரஸிகமணியை நினைக்கும் போது அந்தப் பொதியை முனிவர் அமரர் ரஸிகமணியுமே நம் கண்முன் வந்து விடுகிறாரே. ஆம், ராமனுக்கு, கம்பனுக்கு, ரஸிகமணிக்கு எல்லாம் நமது வணக்கம் உரியதுதானே.

❖❖❖