உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

105

ஊஞ்சல் மண்டபத்திற்கு வராது போகலாம். இனி பெருமாள் கோயிலுக்குள் நுழையலாம். நுழைந்ததும் ராஜ கோபுரத்தின் இடப்பக்கத்திலே இரண்டு மாடங்கள் இருக்கும். அந்த மாடங்களில் இருப்பவர்கள் கம்பர்களும் அவர் மனைவிகளும் இதென்ன கம்பர்கள் என்று கேட்காதீர்கள். இங்குள்ளவர்களைக் கேட்டால் கம்பனையும் அவர் மனைவியையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அந்த சதிபதிவிக்கிரஹங்கள் பின்னம் அடைந்துவிட்டது. அதனால் புதிய சிலைகளை பண்ணி அவைகளையும் வைத்திருக்கிறோம் என்பார்கள். சரி இருக்கட்டும். நான் அறிந்த மட்டிலும் நாம் படித்த அறிவுகளைக் கம்பனுக்கும் இந்தச் சிலைக் கம்பனுக்கும் யாதொரு ஒற்றுமையும் இல்லைதான். இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் கம்பன்கள், கம்பன் போன்றவர்கள் பலர் தோன்றத்தானே வேண்டும். அதற்கு அறிகுறியாக ஒன்றுக்கு இரண்டாக இங்கே கம்பன் நின்று கொண்டிருக்கிறானோ என்று எண்ணத் தோன்றுகிறது. இனி காலதாமதம் செய்ய நேரமில்லை, நேரே விறுவிறு என்று துவஜஸ்தம்பம், இரண்டாவது கோபுர வாயிலில் மகாமண்டபம் எல்லாவற்றையும் கடந்து பெருமாள் சந்நிதிக்கே வந்துவிட வேண்டியதுதான். அங்கு வேலை நிறைய இருக்கிறது. அர்த்தமண்டபத்தின் படிக்கட்டுகளின் பேரில் ஏறுகின்றபோதே கிட்டத்தட்ட பன்னிரண்டு அடி உருவில் நின்றிருக்கும் கோலத்தில் ஆஜானுபாகுவாக நல்ல சிலை உருவில் பெருமாள் சேவை சாதிப்பார். அணிந்திருக்கும் ஆடைகளும் அணிகளும் அவன் திருவுக்கும் திருவாகிய செல்வன் என்பதைப் பறைசாற்றும். தலையிலே தங்கக் கிரீடம், இடையிலே தசாவதார பெல்ட், கழுத்திலே சஹஸ்ரநாமமாலை, தோள்களிலே வாகுவலயம், மார்பிலே லக்ஷ்மி, எல்லாம் தங்கத்தால் ஆனவை. நெற்றியிலோ வைரத்திருநாமம். இப்படியே பொன்னாலும் மணியாலும் வைத்து இழைத்திருக்கிறார்கள் பக்தர்கள். ஆனால் இவைகளை எல்லாம் விட அழகொழுகும் சாந்தமும் அற்புதமான புன்னகையுமே தவழும்