பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

109


மிதிலை மாநகரில் வீசுகிறது. மாடங்களில் அமைந்த மணிப்பூங்கொடிகள் அசைந்து ஆடுகின்றன. அரச வீதியில் இரு மருங்கும் வரிசையுள் விளங்கிய வீடுகளினின்றும் எழுந்து வீணை ஒலி வாயில் வழியே தவழ்ந்து வருகின்றது. முத்துப்போல் பூத்து, மரகதம் போல் காய்த்து, பவளம் போல் பழுத்து இலங்கும் கமுக மரத்தில் கட்டிய ஊஞ்சலில் பருவ மங்கையர் இருந்து பாடி ஆடுகின்றனர். பூஞ்சோலைகளில் பளிங்கு போன்ற பந்துகளை வீசிப் பிடித்து பாவையர் விளையாடுகின்றனர். அரங்குகளில் நடனமாதர் கைவழி நயனம் செல்ல கண்வழி மனமும் செல்ல களி நடனம் புரிகின்றனர். இத்தகைய இன்பம் நிறைந்த அந்த அணிவீதியில் கோமுனிவர் முன்னே செல்ல, தம்பி பின்வர மஞ்செனத் திரண்ட கோல மேனியும், கஞ்ச மொத்தலர்ந்த கண் வாய்ந்த இராமன் செல்கின்றான்.

அப்பெரு வீதியிலே அமைந்த கன்னிமாடத்தின் மேடையிலே மிதிலை மன்னன் மகளாகிய சீதை மெல்லிய பூங்காற்றின் இனிமையை நுகர்ந்து இன்புறுகிறாள். அருகே அமைந்த அழகிய துறையில் அன்னம் பெடையொடு ஆடக்கண்டு களிக்கின்றாள். அந்நிலையில் கன்னிமாடத்தின் மருங்கே செல்லும் கமலக்கண்ணன், மேடையிலே இலங்கும் மின்னொளியை நோக்குகின்றான். பருவமங்கையும் எதிர்நோக்குகின்றாள். இருவர் கண் நோக்கும் இசைகின்றது. பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணிப்புற்ற இராமன் காதலை மனத்தில் கரந்து வீதியின் வழியே சென்று மறைகின்றான். இது கம்பனது வர்ணனை.

இந்த வர்ணனையில் இயற்கை எழிலுற வர்ணிக்கப்படுகிறது. அதற்குமேல் காதலர் உள்ளம் ஒன்றோடொன்று கலந்து உறவாடும் நிலையும் அழகாக வர்ணிக்கப்படுகிறது. கம்பனது காவியத்தில் பலபல அம்சங்கள் நம் உள்ளம் கவர்கின்றது. அதன் கதை அமைப்பு