பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

கம்பன் சுயசரிதம்

காவியக் கட்டுக் கோப்பு, பாத்திர சிருஷ்டி, நாடக பாவம், உவமை அழகு முதலியவை நிரம்பிய காவியம் அது எப்படி எந்தெந்த கோணத்திலிருந்து ஆராய்ந்தாலும் கம்ப இராமாயணத்தில் சிறந்த அம்சம் கவிதை. அந்தக் கவிதை மூலம்தான் எவ்வளவு அழகு அழகான கற்பனைகள், வர்ணனைகள் எத்தனை எத்தனை அற்புத சித்திரங்கள். கம்பன் இயற்கையைத் தான் சிறப்பாக வர்ணிக்கிறான் என்றில்லை. ஒரு ஆடவனையோ இல்லை ஒரு பெண்ணையோ வர்ணித்தாலும் சரி, ஒரு காதல் காட்சியை, ஒரு சோக பாவத்தை, ஒரு போர்க்களக்காட்சியை, ஓர் அவலநிலையை, எதை வர்ணித்தாலும் அதில் அவனது தனித்தன்மை விளங்கும்படி செய்யும் பேராற்றல் பெற்றவனாக இருக்கிறான். அதனால்தானே கல்வியில் பெரியவன் கம்பன், கவிச்சக்கரவர்த்தி கம்பன் என்றெல்லாம் பாராட்டப்பட்டு வந்திருக்கிறான். இன்று எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சில நிமிடங்களில் கம்பனது வர்ணனை அழகு முழுவதையும் சொல்லிவிட முடியாது தான் என்றாலும், அவன் வர்ணனைகள் வெறும் இயற்கை வர்ணனைகளாக மட்டும் அமையாமல் மனித உள்ளத்தில் உருவாகும் உணர்ச்சிகளையும், கலந்து விளங்கும் ஒரு அற்புதப் படைப்பாக எப்படி இருக்கின்றன என்பதற்கு மட்டும் ஒன்றிரண்டு சான்று தர விரைகின்றேன்.

காவியங்களில் சூரிய உதயம், சூரியஸ்தமனம், சந்திரோதயம் முதலிய சிறப்பான வர்ணனைகளாக அமைவதுண்டு. தங்கம் உருக்கி தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமாக இலங்கும் பாரதியின் சூரியோதயம் நம் நெஞ்சை விட்டு அகலாத சித்திரம் அன்றோ. அதைப் போலவே கம்பனும் வானரங்கில் நடம் புரியும் கண்ணுதல் வானவன் கனகச்சடை விரித்தால் என விரிந்து கதிர்களால் காலைச் சூரியன் ஒளிவீசி வெளிவருவதை வர்ணிக்கிறான். அதுபோலவே அவனது காவியத்தில் அந்திதரு சித்திரமும், அழகோவியமாகவே அமைந்துவிடுகின்றது