பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

கம்பன் சுயசரிதம்

கட்டுக்கோப்புக்கு அந்தப் பாத்திரம் அவசியமான பாத்திரமே அல்ல என்றாலும் சிறியன சிந்தியாத வாலியின் பெருங்குணத்தைச் சித்தரித்துக் காட்டுவதற்கு உதவும் ஒரு பாத்திரமாக தாரையை அமைக்கிறான் கம்பன். மேலும் பெண்ணின் பெரு நலத்தை எல்லாம் விளக்க எழுந்த ஒரு சிறந்த பாத்திரமாகவே அவள் அவனது காவியத்தில் உருப்பெறுகிறாள்.

காவிய அரங்கிலே அவளை அழைத்து வரும் போதே தாரை அமிழ்தத்தில் தோன்றிய வேயிடைத் தோளினாள் என்று மிக அழகாகவே அறிமுகப்படுத்துகிறான். சுக்ரீவன் தன் சகோதரனான வாலியைப் போருக்கு அழைக்க, அந்தச் சவாலை ஏற்றுப் போருக்கெழுந்த வாலிய இடை நின்று தடுக்கிறாள். அவனது மனைவி தாரை. ஆனால் வீரருள் வீரனான வாலியோ விடுவிடு என்றே அவளை உதறிவிட்டு முன் நடக்கிறான். அப்போதுதான் அவளை மலைக்குல மயில் என்று அருமையாக அழைக்கிறான். மேலும் தனது மனைவியை மயில் இயல், குயில் மொழி என்றே போற்றுகிறான். வானரமாகப் பிறந்தவளே ஆனாலும் வாலிக்கு அவள் மயிலின் சாயலையும் குயிலின் குரலையும் பெற்றுள்ள கோமள சுந்தரியாகவே தோன்றுகிறாள். ஆதலால் தானோ என்னவோ அமிழ்தில் தோன்றியவள் என்றே கம்பன் நமக்கு அவளை அறிமுகம் செய்து வைக்கிறான். அத்தகைய மனைவியிடம் தன் வீரப் பிரதாபத்தையெல்லாம் அளக்கிறான் வாலி. மந்தர நெடுவரை மத்தாக்கி வாசுகியாம் கயிறு கொண்டு பாற்கடலைக் கடைந்த தேவர்களும் அசுரர்களும் அழைத்து நின்ற போது தான் ஒருவனாகவே இருந்து கடல் கடைந்த தன் கரதலங்களின் வலியை எல்லாம் எடுத்து உரைக்கிறான். மேலும் தன்னை ‘எதிர்ப்பவர் பலத்தில் பாதியைத் தான் பெறும், வரத்தையும் நினைவூட்டுகிறான். ஆதலால் நீ துயர் ஒழிக மலைக்குலமயிலே என்றே பேசிவிட்டு விரைய முனைகிறான்.