பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

கம்பன் சுயசரிதம்

சொல்ல முடியாது. கம்பன் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டவர்கள், ஈடுபடுகிறவர்கள், ஈடுபட இருக்கின்றவர்கள் எத்துணையோ பேர். ஆனால் அத்தனை. பேருடைய சேவையையும் விஞ்சி நிற்கிறது ரசிகமணியின் சேவை. இருவருக்கும் ஏற்பட்டுள்ள உறவு, ஏதோ ஊனிற்கலந்த உறவாக இல்லை. உயிரில் கலந்த உறவாக உணர்வில் கலந்த உறவாக இருக்கிறது. அதனால் தான் அத்துணை ஈடுபாடு, ஆர்வம் எல்லாம், அவர்களுக்குக் கம்பன் கவிதையில், இந்த உறவைப் பற்றி எழுதும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது எனக்கு.

ஐம்பது, அறுபது வருஷத்திற்கு முன்னால் தமிழ் படிக்கிறது, பாடம் கேட்கிறது என்றெல்லாம் இருந்தது தமிழ்நாட்டில். சிறந்த வித்துவான்களை அடுத்து, அவர்களுடனேயே குருகுலவாசம் செய்து வருஷக்கணக்காகத் தமிழ் படித்தவர்களும் உண்டு. மேலும் புலவர் பலர் கூடி ஒரு வள்ளலின் ஆதரவில் வளர்ந்து, பாட்டுக்களும் சீட்டுக் கவிகளுமாக பொழுதுபோக்கிய காலமும் உண்டு. அங்கெல்லாம் அடிபடுவது யமகம் திரிபுகள்தாம். அந்தச் செய்யுள்களுக்குப் பொருள் உரைப்பது என்பதே பெரிய வெற்றி என்று எண்ணியிருந்தவர்களும் உண்டு. இப்படிப்பட்ட புலவர் குழாத்திடையே எல்லாம் கம்பன் தலை காட்டியதில்லை. கம்பன் என்ன எல்லாம் வெள்ளைக்கவி பாடியவன் தானே, யமகம் திரிபுகள் எல்லாம் பாடவில்லையே என்று ஒதுக்கியே வைத்திருந்தார்கள். இவர்களைவிட, சைவப் பெருமக்கள், கம்பன் காவியம் பக்கமே வரமாட்டார்கள். அக்காலத்தில் கம்பராமாயணம் படித்தவர்கள், முக்காடிட்டுக் கொண்டே படித்தார்கள். காலம் மாறியது. ஆனால் வேறொரு திசையை நோக்கி.

முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன், ஆங்கிலம் நம் நாட்டில் ஆதிக்கம் பெறலாயிற்று. ஆங்கிலம் கற்ற தமிழர்கள்