பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

125

எல்லாம், தமிழில் என்ன இருக்கிறது? என்று நினைக்க ஆரம்பித்தார்கள். வீட்டிலிருந்தாலும் சரி, வெளியில் ரயில் பயணம் செய்தாலும் சரி, ஆங்கிலப் புத்தகங்களையே வாங்கிப் படித்தார்கள். நண்பர்களோடு அளவளாவிய போதெல்லாம் ஆங்கிலத்திலேயே உரையாடினார்கள். மேடைகளிலே ஏறி, எனக்குத் தமிழ் பேச வராது என்று சொல்லி ஆங்கிலத்திலேயே பேசினார்கள். அதுதான் கவுரவம் என்று கூடக் கருதினார்கள். இத்தனைக் காரியங்களுக்கும் உலை வைத்தார் டிகேசி.

தமிழ்ப் புலவர்கள் எல்லோரையும் தம் பக்கம் இழுத்துக் கொள்வதில் டிகேசி பூரண வெற்றி பெறாவிட்டாலும் ஆங்கிலம் கற்ற மேதைகளை எல்லாம், தமிழ் மொழியில், தமிழ்க் கவிதையில், கம்பராமாயணத்தில் மோகம் கொள்ளச் செய்தார். கவிதையைக் கருவியாக வைத்து, அடிப்படைத் தத்தவங்களையும், காவிய ரசனைகளையும் அவர்கள் விளக்க ஆரம்பித்த பின்தான், தமிழில் இப்படி எல்லாமா இருக்கிறது? என்று அதிசயித்தார்கள் அநேகர்.

நதியின் பிழை அன்று
    நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று
    மகன் பிழை அன்று, மைந்த
விதியின் பிழை, நீ இதற்கு
    என்னை வெகுண்டது? என்றான்

என்ற பாட்டை வைத்து இறைவனின் நியதியை என்றோ விளக்கியதை ஆங்கில மோகமும், சமஸ்கிருதக் காதலும் நிறைந்திருக்கும் திரு. கே. பாலசுப்பிரமணிய அய்யர் அவர்கள் இன்றும் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்கள். ராஜாஜி அவர்களைக் கம்பன் கவியில் ஈடுபடுத்தியதை எல்லாம் தமிழ் உலகம் நன்கு அறியும்.