பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

கம்பன் சுயசரிதம்

தமிழ்நாட்டின் கவி உலகில் கம்பன் அன்று முதல் இன்று வரை ஏக சக்ராதிபத்யம் செய்து வருகிறான். பண்டிதரும் பாமரரும் ரசிக்கும் வகையில், அவன் கவிதையைப் பாடுவோர் தொகை பெருகி இருக்கிறது. கம்பன் காவியத்தில் ஈடுபட்டவர்களை எல்லாம் மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். தாமே படித்துச் சுவைத்து, அனுபவித்து அந்தக் கவிதைச் சுகத்திலேயே அமிழ்ந்து கிடப்பவர்கள் ஒரு சாரார். படித்து அனுபவித்ததைப் பலருக்கும் எடுத்துச் சொல்லி தான் பெற்ற இன்பத்தைப் பிறருடனும் பகிர்ந்து மகிழ்பவர்கள் மற்றொரு கூட்டத்தார். இனி, படித்து அறிந்த விஷயத்தை எல்லாம் அற்புதம் அற்புதமாக எழுதி வெளியிட்டு நேரிலே கேட்க வாய்ப்பு அற்றவர்களும் படித்து அனுபவிக்கும்படி செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் மூன்றாவது கூட்டத்தார். இந்த மூன்று கூட்டத்திலும் அக்ர ஸ்தானம் டிகேசிக்குத்தான். டிகேசி கம்பனைப் படித்தார்கள் என்றால் உண்மையில் அவர்கள்தான் படித்தார்கள். ஏதோ ரயிலுக்குப் போகிற அவசரத்தில், பக்கங்களைப் புரட்டிப் புரட்டி நாவல் படிக்கிற மாதிரி படிக்காமல், ஆர அமர இருந்து ஐம்பது ஆண்டுகளாகப் படித்தார்கள். காண்டம் காண்டமாக, படலம் படலமாக, பாடல் பாடலாக படித்தார்கள். வீட்டில் இருக்கும்போதும் படித்தார்கள், கோர்ட்டிற்குப் போகும்போதும் படித்தார்கள், சட்டசபைக் கூட்டத்திற்குச் சென்றும் படித்தார்கள். விஷயம் பலருக்குத் தெரிந்திருக்கும். டிகேசி அவர்கள் 1927 - 28 இல் சட்டசபை அங்கத்தினராக இருந்தபோது, அங்குள்ள தமிழ் அன்பர்களுக்கு மட்டுமல்ல, ஆந்திர நண்பர்களுக்குமே கம்பன் மோகம் ஏற்படும்படி செய்தார்கள் என்பதும், அதில் ஒரு ஆந்திர எம்எல்ஏ டிகேசியை சட்டசபைக் கட்டிடத்தில் சந்திக்கும் போதெல்லாம் தலைமேல் கைகூப்பி கங்கை இருகரையுடையான் என்ற பாடலைப் பாடியே வரவேற்பார் என்பதும் பலரும் அறிந்ததுதானே. வீட்டிலே மலேரியாக் காய்ச்சலால் வாடி வதங்கிப் படுக்கையில் கிடந்த காலத்தும் படித்தார்கள்.