பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

129

மாணவர்கள் உட்கார்ந்து பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ராமனுக்கு மகுடம் சூட்டத் தீர்மானித்துவிட்டார் தசரதர். சிற்றரசர்களும் மந்திரக் கிழவர்களும் இசைந்துவிட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒரே எக்களிப்பு. கோசலையின் தாதிப் பெண்கள் நால்வருக்குச் செய்தி தெரிய வருகிறது. அதைக் கோசலையிடம் சொல்ல விரைகிறார்கள். ஓடுகிறார்கள். அவர்கள் நிலையை வர்ணிக்கிறான் கம்பன். அதைச் சொல்கிறார்கள் டிகேசி. விஷயத்தைத் தெளிவாக்கிவிட்டுப் பாட ஆரம்பித்தார்கள்.

ஆடு கின்றனர், பண் அடைவு இன்றியே
பாடு கின்றனர், பார்த்தவர்க்கே கரம்
சூடு கின்றனர், சொல்லுவது ஓர்கிலர்
மாடு சென்றனர் மங்கையர் நால்வரே.

பாட்டைப்பாட ஆரம்பித்ததும் என் பக்கத்தில் இருந்த பள்ளித்தோழன் “கொஞ்சம் வெளியே போய் வருவோமோ?” என்றான். “இல்லை, நீ போய் வா” என்றேன் நான். சரி என்று போய்விட்டான். கல்லூரிக்கு வெளியே உள்ள காப்பி ஹோட்டலுக்குப் போய் காப்பி சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை பாக்கெல்லாம் போட்டுக்கொண்டு, கொஞ்ச நேரம் வெளியில் நின்றவர்களிடம் அரட்டையும் அடித்துவிட்டு, அரைமணி நேரம் கழித்து திரும்பவும் ஹாலுக்குள் வந்தான். டிகேசி அப்போதும் ஆடுகின்றனர், பண் அடைவு இன்றியே பாடுகின்றனர் என்று ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தார்கள். அந்தப் பாட்டை, அந்தப் பாட்டை என்ன அந்தப் பாட்டின் முதலிரண்டு அடிகளைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அன்று எனக்கு இந்தப் பாட்டு மனனம் ஆயிற்று. இன்றும் அந்தப் பாட்டு என் உள்ளத்தைவிட்டு நீங்கவே இல்லை. டிகேசியை நினைத்தால் இந்தப் பாட்டு ஞாபகத்துக்கு வருகிறது. இந்தப் பாட்டைப் பாடினால் டிகேசி என் முன் வருகிறார்கள்.