பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

139

சொல்வல்லான் நல்ல உருவத்தோடு கூடிய கவி. ஆனால் ஆகாதென்றால் என்று ஆரம்பிப்பது கவியே இல்லை. ஆகாதென்றால் என்பதில் வேகமே இல்லை, மாகாதல் இராமன் என்பது தமிழாகவே தோன்றவில்லை, வையம் ஈந்தும் போகா உயிர்த்தாயர் என்பதில் பொருள் முடிபோ இலக்கண முடிவோ இல்லை, இவ்வயின் நிற்றலும் ஏதம் என்று என் இவ்வளவு அவசரமாகத் துரத்துவானேன்? இத்தனையும் சொல்லிவிட்டு, களிமண்ணால் செய்த பிள்ளையாரைப் பிசைந்து அளித்த மாதிரி லட்சுமணன் என்னும் அரிய உருவத்தையே பிசைந்து அழித்துவிடுகிறது இந்தச் செய்யுள் என்றும் சொன்னார்கள். இப்படியே ஒவ்வொரு பாடலையும் சுண்டிப் பார்த்து உண்மையான கம்பன் பாட்டைக் கண்டுபிடித்தார்கள். செருகு கவி என அகற்றும் ஒவ்வொரு பாட்டிற்கும் அவர்கள் காரணம் சொல்லக்கூடும். அதைக் கேட்கும் வாய்ப்புப் பெறாதவர்கள்தான், அவர்கள் செருகு கவிகளை நீக்குவதைப் பற்றிப் புகார் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

டிகேசி அவர்களுடைய அங்கலாய்ப்பு எல்லாம் செருகு கவிகள் சேர்ந்ததில் இல்லை. இந்தச் செருகு கவிகளைச் செருகுவதற்காக எத்தனை நல்ல கவிகளை, காவியத்திலிருந்து அகற்றினார்களோ என்பதைப் பற்றித்தான். செருகு கவிகளால் உண்மையான கவிகளுக்கே தீங்கு நேரிடுகிறது என்பது அவர்களுடைய தீர்மானமான அபிப்பிராயம். அந்த அபிப்பிராயம் இன்று வலுப்பெற்று வருகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. திரு. சொ. முருகப்பா அவர்களது இராம காதைப் பதிப்பே சொல்லும்.

டிகேசி பேரில் இன்னொரு புகார், அவர்கள் கம்பன் பாடல்களைத் திருத்துகிறார்கள் என்று. பாடல்கள் எல்லாம் கம்பனோ கற்றுச் சொல்லியோ எழுதியவை. அப்படியே நம்மிடம் வந்துவிடவில்லை. இடையில் எத்தனையோ பேர் ஏடுகளை எழுதியிருக்க வேண்டும். எழுதியவன் ஏட்டைக்