பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

141

எழுதுவார் என்று சொல்வதில் என்ன புண்ணியமோ? பாடல் உண்மையான உணர்ச்சியிலிருந்து எழுந்தது. ஆயிரத்துச் சில்வானம் வருஷங்களுக்குப் பின் வந்த நமக்கு உண்மையைக் காட்டுகிறது. ஆனந்தத்தை அளிக்கிறது.

இந்த விளக்கத்தைக் கேட்டபின் இந்தச் சின்னத்திருத்தம் அவசியமே என்று தோன்றுகிறதல்லவா? இப்படியேதான் அவர்கள் செய்த ஒவ்வொரு திருத்தத்திற்கும் காரணம் சொல்வார்கள்.

இன்னும் ஒரு சந்தர்ப்பம். ஒருநாள் நான் உடனிருந்து அவர்களிடம் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஜனகனது பேரவையில் விசுவாமித்திரன், ராமன், லட்சுமணன் மூவரும் இருக்கிறார்கள். காட்டிற்குத் தன்னுடன் வந்த ராமன் தாடகையை வதம் செய்தது, அகலிகை சாபந் தீர்த்தது எல்லாவற்றையும் சொல்லிவிட்டுப் பின்னால் ராம லட்சுமணருடைய குலமுறை கிளத்தத் துவங்குகிறான் விசுவாமித்திரன். இதைக் கம்பன் சொல்கிறான். பாட்டு இதுதான்

கோத மன்தன் பன்னிக்கு
    முன்னை உருக் கொடுத்தது, இவன்
போது வென்றதுஎனப் பொலிந்த
    பொலன் கழற்கால் பொடிகண்டாய்
காதல் என்றன் உயிர்மேலும்
    இக்கரியவன் பால் உண்டால்
ஈது இவன்தன் வரலாறும்
    புயவலியும் என உரைத்தான்

இந்தப் பாட்டில் மூன்றாம் அடியில் காதல் என்றன் உயிர் மேலும் இக்கரியவன் பாலுண்டால் என்ற அடிகளைப் படிக்கும்போது என்னவோ தட்டுகிறது. மேலும் விசுவாமித்திரன் ராமன் பேரில் உள்ள அன்பை, இப்படித்