பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

கம்பன் சுயசரிதம்


என்று நம்பினான் காகுத்தன். ஆனால் அனுமன் ஆற்றலை அறிந்த கவிகுலக் கோனாகிய சுக்ரீவனோ கண்டுவிட்டால் சீதையைக் கொண்டே வந்துவிடுவான் என்று எண்ணினான். இதை உணர்ந்த அனுமனும் சீதையை அவள் இருந்த பர்ணசாலையை, ஏன் பர்ணசாலையிலிருந்த அசோக வனத்தையே பெயர்த்து எடுத்துச் செல்லத் துடிக்கிறான். அந்த ஆற்றல் உடையவனே தான் என்பதை சீதைக்குப் புலப்படுத்த தன் பேருருவைக் காட்டுகிறான். அனுமனுடைய அந்த பேருருவைப் பார்த்துவிட்டு, சீதை சொல்கிறாள். “என்னைக் கண்டுபிடிக்க நீ ஒருவன் இருந்தாய். நீ ஒருவன் இல்லாது போயிருந்தால் ராமனுடைய புகழை யார் அறியப் போகிறார்கள்? ராமனுடைய அருளும் புகழும் உன்னாலன்றோ உலகம் உள்ளளவும் நிலைபெறுகிறது” என்று. இதைச் சொல்கிறான் கம்பன்.

ஆழி நெடுந்தகை ஆண்தகைதன்
     அருளும் புகழும் அழிவின்றி
ஊழி பலவும் நிலை நிறுத்தற்கு
     ஒருவன் நீயே உளயானாய்

என்று. இந்தப் பாடலைப் பாடும்போது, கம்பன் தனக்குப் பின்னால் ஆயிரம் வருஷத்துக்கு அப்பால் தோன்ற இருக்கும் டிகேசியை நினைத்திருக்க வேண்டும். ஆம் அப்பா என் புகழை நிலைநிறுத்த நீயே ஒருவன் உளயானாய் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருக்கவும் வேண்டும், இல்லையா?

வாழி கம்பனும் டிகேசியும்.

❖❖❖