பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

161

சரி Long distance shot, close up சினிமா டெக்னிக்கிற்கு உதாரணம் கொடுத்துவிட்டீர், பழைய எண்ணங்களில் உள்ளத்தில் ஓடுவதைக் காட்ட சினிமாக்காரர்கள் கையாளும் தொழில் திறமையை உத்தியை உமது கம்பன் எப்படிக் காட்டுகிறான் என்று தானே கேட்கிறீர்கள். அதற்கும் ஒரு சான்று தருகிறேன்.

இலங்கையில் ராமன் ராவணனுடன் போர் ஏற்று நிற்கிறான். போரிலே ராமனது கையே மேலோங்கி நிற்கிறது. இந்த நிலையிலும் சீதையை எப்படியும் அடைந்துவிட வேண்டும் என்ற ஆவல் மட்டும் இராவணன் உள்ளத்தில் அடங்காத ஆவலாக ஊற்றம்பெறுகிறது. இதற்கு என்ன என்ன தந்திரங்கள் எல்லாம் கையாளலாம் என்று பார்க்கின்றான் இராவணன். தன் அருமைத் தம்பியாகிய கும்பகருணனை ராமனுடன் போர் செய்யும்படி அனுப்பிவிட்டு, ஒரு மாயாஜால சிருஷ்டி பண்ணி அவனை இழுத்துக் கொண்டு சீதையிருக்கும் சோக வனத்திற்கு வருகிறான், அந்த மாயாஜாலனோ சீதையை அணுகி, ராமனை விட்டுத் திரிலோக அதிபதியான ராவணனையே காதலனாக ஏற்று அவனது காதற் கிழத்தியாக வாழ்வதே சிறப்பு என்று கூறி அவள் மனதைக் கலைக்க முனைகிறான். எதற்கும் கலங்காத சீதை, எந்தை இவ்வாறு கூறான் என்று மாயாஜாலனையும் அவன் கூறியதையும் வெறுத்து ஒதுக்கி விடுகிறான். இந்த நிலையில் போர்க்களத்துத் தூதுவன் ஒருவன் ஓடிவந்து இராமனுடன் ஏற்று நின்ற போரில் கும்பகர்ணன் வீழ்ந்துவிட்டான். மாண்டு மடிந்துவிட்டான் என்று ராவணனிடம் சொல்கிறான். இந்தச் செய்தியைக் கேட்ட ராவணன் அப்படியே மயங்கி விழுந்துவிடுகிறான். இதே செய்தி சீதையின் காதில் விழுகிறது. அச்செய்தி அவளுக்கு எத்தகையதொரு மாற்றத்தைக் கொடுக்கிறது என்பதை கம்பர் சொல்கிறார். காவியத்தில் கும்பகர்ணனை நேரில் சீதை பார்த்திராவிட்டாலும் அவனுடைய ஆகிருதியைப் பற்றி