பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

கம்பன் சுயசரிதம்


திரிசடை முதலியோர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆற்றிலே அவன் குளிக்கும்போது கால் தேய்க்கக் கல்லாக இருப்பது மகாமேரு மலை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் என்றல்லவா சொல்லியிருக்கிறார்கள் அவர்கள்.

கல்லன்றோ நீராடும் காலத்து
     கால் தேய்க்க
மல்லேந்து தோளர்க்கு
     வடமேரு

என்பதல்லவா வர்ணனை. இந்தப் பெரிய அரக்கனுடன் அல்லவா ஆறடி உயரமே உடைய ராமன் போர் ஏற்று நிற்கிறான். அந்தக் காட்சி அவள் கண்முன் தோன்றுகிறது. அந்தப் போரில் ராமன் வெற்றி பெறுவது எங்ஙனம் என்று ஒரு துணுக்கமே அடைகிறாள், அஞ்சுகிறாள். அந்தச் சமயத்தில் அந்த அரக்க வீரனைத் தன் நாயகனான ராமனது அம்பு வீழ்த்தி விடுகிறது. அவனும் மாண்டு மடிந்து விடுகிறான் என்ற செய்தி வருகிறது. இந்தச் செய்தி அவளது செவியை எவ்வளவு குளிர்வித்திருக்கும். செவியை மாத்திரந்தானா குளிர்விக்கும் உள்ளத்தையே பூரிக்க வைத்துவிடாதா? சரி தனக்கு இனி விடுதலை விரைவிலேயே கிடைத்துவிடும் என்று மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியுமா? அந்த மகிழ்ச்சியில் அவள் உடல் ஒரு சுற்றுப் பெருத்துவிடாதா என்ன என்றெல்லாம் நாம் எண்ணத்தானே செய்கிறோம். அத்தனை எண்ணமும் கம்பனது உள்ளத்திலும் எழுந்திருக்கிறது. பாடுகிறார்.

கண்டாள் கருணனை
      கண் கடந்த தோளானைக்
கொண்டாள் ஒரு துணுக்கம்
     அன்னவனைக் கொன்றவனாம்