பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கம்பன் சுயசரிதம்


பௌத்தமும் நாட்டைவிட்டு ஓட ஆரம்பித்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் வேத கோஷங்கள், தேவாரப் பண்கள், திவ்யப் பிரபந்தங்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. வடநாட்டுத் தெய்வங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் புகுந்திருக்கின்றன. அரசர்களும் பாறைகளைக் குடைந்து குகைகள் உருவாக்க முனைந்திருக்கிறார்கள். மலைகளை வெட்டிச் செதுக்கி ரதங்களை அமைத்திருக்கிறார்கள். குகைகளில் எல்லாம் சித்திரங்கள். தூண்களில் எல்லாம் சித்திரங்கள். மாடங்களில் எல்லாம் மூர்த்தங்கள். மன்றங்களிலெல்லாம் நடனத் திருவுருவங்க்ள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. பல்லவர்களுக்குப் பின் வந்த சோழ மன்னர்கள் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள், கலைகளைப் போற்றியிருக்கிறார்கள். எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுது கட்ட முனைந்திருக்கிறார்கள். முழுக்க முழுக்கக் கல்லாலேயே கோயில்களும், அந்தக் கோயில்களில் மூர்த்திகள், தேவியர் என்றெல்லாம் பிரதிஷ்டை ஆரம்பித்திருக்கிறது. கறை மிடற்று இறை, திங்கள் மேவும் செஞ்சடைத் தேவன், அழல் நிறக்கடவுள், பாதி மதிசூடி, கற்றைவார் சடைமுடி கணிச்சி வானவன் என்று சிவபெருமான் பாராட்டப்பட்டிருக்கிறான். நாறுபூங்குழல் நங்கை, கற்றைப் பூங்குழலாள் கருந்தடங் கண்ணி, கரும்பையும் சுவை கைப்பிக்கும் செல்வி, தெய்வவாயகி என்றெல்லாம் பர்வதராஜன் மகளுக்குப் பெயரிட்டு இருக்கிறார்கள். இருவரையும் சேர்த்தே உமையொரு பாகத்து ஒருவன், மங்கை பங்கன், தையல் பாகன், பஞ்சில் மெல்லடியாள் பாகன் என்றெல்லாம் வணங்கியிருக்கிறார்கள். இப்படி நாடு முழுதும், தமிழும் பக்தியும் உருவெடுக்கின்ற காலத்தில் தான் நான் பிறந்தேன், வளர்ந்தேன்.

நான் – (இடையிட்டு) சரி சரி. அப்போது நீங்கள் சோழ சாம்ராஜ்யம் மகோன்னத நிலையில் இருந்தபோது தமிழ்நாட்டில் வளர்ந்தீர்கள் என்று சொல்லுங்கள்.