உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

23


அவனைப் பற்றியே அல்ல. அந்த ஆசாமி யார் என்றே எனக்குத் தெரியாது. பல்லவ அரசர்களில் நந்தியம் பெருமாள் தொண்டைமான் - ஆம் உன் குல முதல்வன் தான் - ஒருவன் இருந்திருக்கிறான். அவன் பேரில் கலம்பகம் பாடியிருக்கிறான் எங்கள் பரம்பரையில் ஒரு முன்னோன். அவன் கூறியிருக்கிறானே அவனைப் பற்றி தியாக விநோதன் என்ற பெயர் எங்களுக்கெல்லாம் விநோதமான பெயராகவே தெரியவில்லையே. இதை வைத்துக்கொண்டு நீ இத்தனைக் கூத்து அடிப்பானேன்.

நான் – சரி இனிமேல் உங்களை அதிகம் தொந்தரவு செய்யவில்லை. நீங்கள் எந்தக் காலத்தில் இருந்தால் என்ன? காலம் எப்படியிருந்தாலும் தங்களால் நாடும், ஊரும், காலமும் பொழுதும் உயர்ந்திருக்கிறது. தங்கள் காலம் கம்பர்காலம் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய காலம். அது போதும் எங்களுக்கு

இனி நான் பாடிய காவியம்

கம்பன் – இன்று தமிழ்நாட்டிலே நடக்கும் கிளர்ச்சிகள் எல்லாம் எனக்குத் தெரியும். இந்தத் தமிழ்நாட்டுக் கம்பன், ஏன் அந்த வடநாட்டுக் கதையைக் காவியமாகப் பாடினான் என்று சிலர் கேட்கிறார்கள் என்பதும் தெரியும். நான் வாழ்ந்த காலத்தில் எப்படி வடநாடு தென்னாடு என்ற வேற்றுமை எல்லாம் இல்லாதிருந்தது என்பதைத்தான் முன்னமேயே சொன்னேனே. இந்த வேற்றுமை உணர்ச்சி இல்லாதது மட்டுமல்ல எனக்கு என்னமோ இந்த இராமகாதை நிரம்பவும் மனதுக்கு உகந்ததாயிருந்தது. காரணம். உள்ளங்கை அகலமே உள்ள சின்னஞ்சிறு ராஜ்யத்தை அன்று ஆண்டு வந்த அந்த சேர சோழ பாண்டியர்களுக்குள்தான் எத்தனை எத்தனை பூசல்? எத்தனை எத்தனை போர்.

யாரொடும் பகை கொள்ளலம் என்றபின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது