பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

29


தியாகத்தால் தானாகவே உயர்ந்தவன். உணர்ச்சி வயத்திலே உருவானவன். அவன் மூலம் என் எண்ணங்களை வெளியிட முடியுமா? என்னுடைய கருத்துக்களை ஏற்ற இடத்தில் எல்லாம் தக்க தக்கப் பாத்திரங்கள் மூலம் வெளியிட்டிருக்கிறேன். என்றாலும் என் உள்ளத்தெழுந்த அற்புதமான உண்மைகளையெல்லாம் வெளியிட ஒரு பாத்திரத்தை சிருஷ்டித்துக் கொண்டேன். அந்தப் பாத்திரம்தான் அனுமன். முதல் முதலிலேயே

இல்லாத உலகத்து எங்கும்
இங்கு இவன் இசைகள் கூறக்
கல்லாத கலையும் வேதக்
கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்றன்றே
யார் கொல் இச்சொல்லின் செல்வன்.

என்றுதானே அவனை அறிமுகப்படுத்துகிறேன். ஆற்றலும், நிறைவும், கல்வி, அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லை என்பதை நன்கு உணர்ந்தவன் நான். நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும், கோட்படாப் பதமே அந்தக் குரங்கு உரு எடுத்திருக்கிறது, என்று நம்பினவன். ஆதலால்தான் அவனைப் பிடித்தேன் என் கருத்துக்களை வெளியிட

நான் வணங்கிய தெய்வம் என்ன என்பதைச் சொல்கிறேன் என்று முன்னமேயே சொன்னேன் அல்லவா. அதை இந்த அனுமன் மூலம் தான் சொல்கிறேன். விராதன் துதியிலும், சரபங்கன் ஆச்சிரமத்தில் இந்திரன் துதியிலும், எல்லாம் வல்ல இறைவனின் தன்மையை விளக்கமாகக் கூறத்தான் செய்கிறேன் என்றாலும், என் சிந்தையிலே வளர்ந்த தெய்வத் திருவுருவை அனுமன் மூலம்தான் வெளியிட விரும்பினேன்.