பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கம்பன் சுயசரிதம்


பண்புகளும் வாய்த்தவனாக இருந்தும் – பிறர்மனை நோக்காத பேராண்மை இல்லாதவனாக அமைந்த ஒரே காரணத்தால், எவ்வளவு தவறிவிடுகிறான் என்பதைத்தான் விளக்கினேன் அவனுடைய வாழ்க்கையில்.

“ஈசனை இமையா முக்கண் இறைவனை இருமைக்கேற்ற
பூசனை முறையாய்ச் செய்தவனே.”

ஆனாலும் தருமத்தின் தனிமை தீர்ப்பவன் முன்னால் தலை எடுக்க முடியாது என்பதை அவன் வாழ்க்கையில் நினைவுபடுத்தினேன். அறம் வளர்க்கும் நாடாக நமது தமிழகம் உருவாக வேண்டும் என்பதே நான் கண்ட கனவு. அப்படிப்பட்ட நாட்டிலேதான் கல்வியும் செல்வமும் செழித்து வளரும். அங்கேதான் மக்கள் எல்லா நலமும் பெற்று வாழ்வார்கள். இன்று ஏதோ பொது உடைமையைப் பற்றிப் பலர் பேசுகிறார்களே – ஏதோ எத்தனையோ கடலுக்குள் அப்பாலுள்ள நாடுகளில் இருந்தெல்லாம் கொண்டு வந்து சான்று காட்டுகிறார்களே – இது எல்லாம் எனக்குத் தெரியாதா என்ன? இவர்கள் சொல்லும் முதலாளி தொழிலாளி, பணக்காரன் ஏழை, படித்தவன் படியாதவன் என்ற வேற்றுமையே நாட்டில் இருக்கக்கூடாதுதான். அதற்காக எல்லோரையுமே தொழிலாளிகளாக, ஏழைகளாக, படியாதவர்களாக ஆக்கிவிடக்கூடாது. எல்லோருமே முதலாளிகளாக, பணக்காரர்களாக, படித்தவர்களாக உருப்பெற்றுவிட வேண்டும்.

“கல்லாது நிற்பார் பிறர் இன்மையில்
கல்வி முற்ற
வல்லாரும் இல்லை அவை வல்லர்
அல்லாரும் இல்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ்
செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை, உடையார்களும்
இல்லை”