உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கம்பன் சுயசரிதம்


நிமிர்ந்து பார்த்தேன். கம்பனைக் காணவில்லை. என் கண்முன் நின்றவர் அமரர் டிகேசி, அவரைக் கட்டிப்பிடித்துக்கொள்ள விரைந்தேன். ஆனால் அவரோ, தம்பி உனக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன். கம்பன் காவியத்தை ஆராயாதே, ஆராயாதே, அனுபவித்துப் படி, பிறரும் அனுபவிக்கும்படியாக ஏதோ உன்னால் சொல்லக்கூடுமானால் சொல்லு என்று. இவ்வளவு சீக்கிரத்தில் என் உபதேசத்தை எல்லாம் மறந்துவிட்டு ஆராய்ச்சியில் இறங்கிவிட்டாயே என்று கண்டித்தார்.

நான் – இல்லை ஐயா! நான் செய்தது தவறுதான். இனி அப்படியெல்லாம் செய்யமாட்டேன். இதற்கெல்லாம் காரணம் முன்பு சின்னப்பட்டமாக இருந்து இன்று பெரிய பட்டம் வகித்திருக்கும் எங்கள் தலைவர் திரு. எ. சி. பால்நாடார் அவர்கள்தான். அவர்கள்தான் என்னை இப்படி ஆராயத் தூண்டிவிட்டவர்கள். இனி நான் இந்தத் தொழிலிலேயே இறங்கமாட்டேன். இறங்கவேமாட்டேன் என்று பன்னிப் பன்னிக் கூறினேன். என் முன் நின்ற அமரர் டிகேசியும் அந்தர்த்தியானம் ஆகிவிட்டார்கள். திரும்பவும் திரும்பவும் கண்ணைக் கசக்கினேன். என்முன் மேஜைமீது கம்பராமாயணச் சுவடிகளில் சில அவிழ்ந்து கிடப்பதைக் கண்டேன். சாஸ்திரியாரும் என்ன சார்! கம்பனின் சுயசரிதம் படித்தீர்களா? எப்படியிருக்கிறது? என்று கேட்டுக்கொண்டே வந்தார். எப்படி இருக்கிறது என்று நான் என்ன சொல்ல? சொல்ல வேண்டியவர்கள் நீங்கள் அல்லவா?