பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

கம்பன் சுயசரிதம்


குலஞ்செய்த பாவத்தாலே
கொடும் பழிதேடிக் கொண்டோம்
சலஞ் செயின் உலகம் மூன்றும்
இலக்குவன் முடிப்பன் தானே

என்று சொல்லியதுடன் நிறுத்திக் கொண்டானா? இல்லை

ஆதலால் அஞ்சினேன் என்று
அருளலை ஆசைதான் அச்
சீதைபால் விடுதியாயின்
அனையவர் சீற்றம் தீர்வர்
போதலும் புரிவர் செய்த
தீமையும் பொறுப்பர் உன்மேல்
காதலால் உரைத்தேன் என்றான்
உலகெலாம் கலக்கி வென்றான்

என்றெல்லாம் பன்னிப் பன்னித்தான் சொல்கிறான் இந்திரசித்தன்.

இந்திரசித்தனது பேச்சைக் கேட்டு இராவணன் அப்படியே தோள்கள் குலுங்கச் சிரித்தான். “என்னடாப்பா என் மகன் இந்திரனையே ஜெயித்தவன் என்றல்லவா எண்ணினேன். இப்படி மனிசரைமதித்து அவர்கள் வீரத்தைக் கண்டு மயங்க ஆரம்பித்து விட்டாயா? போதும்! போதும்! அதோடாவது விட்டாயா? குலம் செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக் கொண்டோம் - என்று குலத்தின் பேரிலே வேறு பழியைப் போடுகிறாய். நான் சீதையை அன்று தண்டகாரண்யத்திலிருந்து தூக்கி வந்தேனே, அன்றே தெரியும் எனக்கு இப்படி ராமலக்ஷ்மணர் பகை வரும் என்று. ஆனால் அன்று நான் அந்த பகையை வலிந்து தேடிக் கொள்ளும்போது, இப்போது இதுவரை இந்த இலங்கையில் போர் செய்து மாண்டு மடிந்த வீரர்கள் என்னைக் காப்பாற்றுவார்கள் என்றாவது, அல்லது இன்னும் என் பக்கத்திலேயே இருந்துபோர் புரியத் தயாராக இருக்கும் வீரர் பலர் என் பகையை முடிப்பார் என்றாவது,