பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

47

அல்லது என் மகன் இந்திரசித்தன் இந்த வலியுடைய பகைவர்களையெல்லாம் கொன்று குவித்து விடுவான் என்றாவது எண்ணி நான் இந்தப் பகையைத் தேடவில்லை. நான் நெடும் பகை தேடினால் அக்கொடும்பகை முடிக்கும் வலி என்னிடம், ஆம் என்னிடமே தான் உண்டு என்று நினைந்து தானே தேடிக் கொண்டேன் என்றெல்லாம் ஆங்காரமாய்ப் பேசுகிறான். அத்துடன் விட்டானா?

மகனே! சீதையை விட்டுவிடு என்று வேறே சொல்லுகிறாய். உன் பேதைப் புத்தி இதிலிருந்தே தெரிகிறதே. சீதையை எதற்காக விடவேண்டும். எல்லாம் இந்த உடலையும் உயிரையும் காப்பதற்குத்தானே. இந்த உடலும் உயிரும் என்ன அவ்வளவு சாஸ்வதமா? என் புகழை விட, இப்போது நடக்கும் போரில் வெற்றி எனதே தான். ஒருவேளை நீ சொல்கிறபடி நான் வெற்றி பெறாமல் தோற்றே போகிறேன் என்று தான் வைத்துக் கொள்வோமே. அப்போதும்தான் என்ன குடிமுழுகிப் போய்விடுகிறது. இந்த ராமனுடைய பெருமையெல்லாம் வலி மிகுந்த ராவண வீரனை வென்றான் என்பதில் தானே. ராமனது புகழ் உலகில் என்றளவும் நின்று நிலவுகிறதோ அன்று வரை என் புகழும் நின்று நிலவத்தானே வேண்டும். அத்தகைய புகழுக்கு மடிவும் உண்டா? சரி, போருக்கு நீ போக வேண்டாம் நானே போகிறேன். வருக தேர் - வருக என்று ஆரவாரித்துக் கொண்டே எழுந்து விடுகிறான் ராவணன். இதைச் சொல்கிறார் கம்பர் மூன்று அருமையான பாடல்களிலே.

முன்னையோர் இறந்தாரெல்லாம்
இப்பகை முடிப்பார் என்றும்
பின்னையோர் நின்றாரெல்லாம்
வென்றனர் பெயர்வர் என்றும்
உன்னைநீ அவரை வென்று
தருதி என்று உணர்ந்தும் அன்றால்
என்னையே நோக்கியான் இந்
நெடும்பகை தேடிக் கொண்டேன்