பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

இராவணன் சீதையைத் தூக்கிச் செல்கிறான். இலங்கை நகரிலே, அசோகவனத்திலே சிறை வைக்கிறான். இங்கே சிறையிருக்கும் செல்வியாகிய சீதையின் சௌந்தர்யம் சுடச்சுட ஒளிரும் பொன்னேபோல் மேலும் மேலும் பிரகாசிக்கின்றது. ரூப சௌந்தர்யத்தின் எல்லையாக நின்ற அவள் குண சௌந்தர்யத்தின் எல்லையாகவும் நமக்குக் காட்சி அளிக்கிறாள்.

ஆவி அந்துகில் புனைவதொன் றன்றி வேறு அறியாள்
தூவி யன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்
தேவு தெண்கடல் அமுது கொண்டு அனங்கவேள் செய்த
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள்

என்று தீட்டும் சோகச் சித்திரத்தில் அவளுடைய ரூப சௌந்தர்யம் குறையத்தான் செய்கிறது.

அருந்து மெல்லடகு யாரிட அருந்துமென்று அழுங்கும்
விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்
மருந்து முண்டுகொல் யான் கொண்ட நோய்க்கு என மயங்கும்

என்ற புலம்பும் நிலையில் சீதையின் குண சௌந்தர்யம் உச்ச ஸ்தானத்தையே அடைகிறது. இந்த நிலையில்தான் இராமதூதனாகிய அநுமன் வந்து சீதையைக் காண்கின்றான். ஆழி கொடுத்து ஆற்றுகின்றான். திரும்பிச் சென்றுதான் சீதையைக் கண்டு களித்ததை இராமனிடம் கூறுகின்றான்.

விற்பெருந் தடந்தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண்டேன் அல்லேன்
இற்பிறப்பு என்ப தொன்றும் இரும்பொறை என்பதொன்றும்
கற்பெனும் பெயரெதொன்றும் களிநடம் புரியக் கண்டேன்

என்று அவன் தான் கண்ட காட்சியை வர்ணிக்கின்றான்.

உன் பெருந் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
மன் பெரும் மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன்
தன் பெரும் தநயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்
என் பெருந்தெய்வம் ஐயா!