உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. கம்பன் கண்ட ராமன்


அந்தம் இல் அழகன் - இராமன்

மங்கியதோர் நிலவினிலே
கனவில் இதுகண்டேன்,
வயது பதினாறு இருக்கும்
இளவயது மங்கை
பொங்கிவரும் பெரு நிலவு
போற்ற வருந் தோற்றம்
துங்கமணி மின் போலும்
வடிவத்தாள் வந்து
‘தூங்காதே எழுந்து என்னைப்
பார்’ என்று சொன்னாள்.
அங்கு அதனில் கண் விழித்தேன்
அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வம்தான்
அது என்றே கண்டேன்.

என்று தன் அழகுத் தெய்வ தரிசனத்தைக் கூறுகிறான் பாரதி. அழகுத் தெய்வம் அவனுக்குப் பதினாறு வயது நிரம்பிய இளவயது மங்கையாகக் காட்சி கொடுத்திருக்கிறது. உண்மையிலேயே அழகுத் தெய்வம் பெண்மை உருவினதுதானா? ஆண்மையில் அழகே இல்லையா?