பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

63

சீதையும் இராமனும் காதலித்துக் களிக்கும் வாழ்வில்தான் எத்தனை அழகு? அவர்களது அழகுடைய வாழ்க்கைக்கு மிதிலா நகரமோ, அல்லது அயோத்திப் பட்டணமோ, இல்லை அங்குள்ள அரச மாளிகைகள் தான் வேண்டும் என்றில்லை. கங்கையிலே, தோணியிலே ஏறிச் சென்றாலும் சரி, தண்டகாரண்யத்திலே கோதாவரிக் கரையானாலும் சரி, அழகனும் அழகியும் குதூகலமாகவே இருக்கிறார்கள். படகில் செல்லும்போதோ,

பால் உடை மொழியாளும்
   பகலவன் அனையானும்
சேல் உடை நெடுன்னீர்
   சிந்தினர் விளையாடி

என்பதுதான் காட்சி. இன்னும் கோதாவரிக் கரையிலே ஓதிமம் ஒதுங்கக் கண்டால், பக்கத்தில் உள்ள சீதையின் நடையோடு, அன்னத்தின் நடையை ஒப்பிட்டு, அன்ன நடை சீதையின் நடைக்குத் தோற்கிறதே என்று சிறுநகை செய்கிறான் ராமனும். சீதையோ, அங்கு வந்து நீருண்டு மீளும் யானைக்குட்டி நடப்பதைத் தன் கணவன் நடையோடு ஒப்பிட்டு, யானையின் நடையையும் விஞ்சுகின்றதே தன் காதலன் நடை என்று பெருமிதம் அடைந்து, புதியதோர் முறுவலே பூக்கிறாள். இப்படியே இன்னும் எத்தனையோ காட்சிகள் காவியம் முழுவதும்.

பெற்ற தந்தையாம் தயரதனோ, அன்னையரோ, இல்லை வில்வித்தை பயிற்றிய விஸ்வாமித்திரனோ ராமனது அழகில் ஈடுபட்டு நிற்பது வியப்பில்லை. கிஷ்கிந்தையை அடுத்த மலையிலே ஒழிந்திருந்த வானர வீரன், சுக்ரீவன் கூட, அந்த குண்டலம் துறந்த கோலத்திலும் குளிர்ந்த கண்களின் அழகிலும் ஈடுபட்டு நிற்கிறானே. அடடே, புயல் தழுவிய மரகத மலை போன்ற அந்தத் தோள்களின் பேரிலே மதி தவழும் முகமாகிய புண்டரீகங்கள் அல்லவா பூத்துக் குலுங்குகின்றன