பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

67

ஒருத்தி போருக்குச் சென்றிருந்த தன் மகன் அங்கே விழுந்து விட்டான் என்று கேட்டு, மகனைத் தேடிச் செல்கிறாள் போர்க்களத்திற்கு. வாளேந்திச் செல்லும் அவளது ஆதங்கம் எல்லாம் அவன் எப்படி இறந்தான் என்று அறிவதிலேதான். மார்பிலே வேலை ஏற்றா அல்லது முதுகிலே புண்பட்டா? என்பதே அவளது கேள்வி. போர்க்களத்தைச் சுற்றிவந்து தன் மகன் மார்பிலே விழுப்புண் பெற்றே மடிந்து வீழ்ந்திருக்கிறான் என்று அறிந்தபோது, அவனை ஈன்றபொழுதில் பெற்ற மகிழ்ச்சியைவிட பெரிய மகிழ்ச்சியே அடைகிறாள். இவள் வீரத்தாய். நல்ல தமிழ் மகள். இத்தகைய வீர மனைவியரை, வீரத் தாயரைப் பெற்றிருந்தது அன்றைய தமிழகம் என்றால் அர்த்தம் என்ன; நாடு முழுவதும் நல்ல வீரர்கள் நிரம்பி இருந்தார்கள் என்பதுதானே.

இப்படி வீரர்கள் நிறைந்த நாட்டிலே பிறந்த வீரக் கவிஞன் ஒரு வீர காவியம் எழுதுகிறான். காவிய நாயகனோ வீர மரபிலேயே வந்தவன், வீர மன்னனின் மகன், ஏன் கோதண்டம் ஏந்திய கையன். அவனைப் பற்றி அவன் விரத்தைப் பற்றியே காவியம் முழுவதும் எழுதித் தீர்க்கிறான். எண்ணிக்கையிலும் ஆற்றலிலும் மிகுந்த அரக்கரது பலமே முன்னிற்கிறது. ராமன் வில்லேந்தி தன்னந் தனியனாய் அவர்கள் முன் நிற்கிறான். அவன் வில்லின் நாணை வளைக்கிறான், சரங்கள் பாய்கின்றன. வில்லில் கட்டிய மணிகள் ஒலிக்கின்றன. அந்த ஒலியைக் கேட்கிறான் கவிஞன். வில்லின் ஆற்றலைச் சொல்கிறான் காவியத்திலே

படுமத கரிபரி சிந்தின;
   பனிவரை இரதம் அவிந்தன;
விடுபடை திசைகள் பிளந்தன;
  விரிகடல் அலறது எழுந்தன;
அடுபுலி அவுணர்தம் மங்கையர்
   அலர்விழி அருவிகள் சிந்தின
கடுமணி நெடியவன் வெஞ்சிலை
   கணகண, கணகண எனுந்தோறும்