தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்
5
தந்தையார் பாஸ்கரத் தொண்டைமானின் கட்டுரைகளும் தவறாமல் இடம்பெற்றன. அவற்றையெல்லாம் தேடி எடுத்துப் பதிப்பிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை. அவற்றைத் தேடிய போது, அத்தனை கட்டுரைகளும் கிடைக்கவில்லை. ‘கம்பன் ஒரு சோக சிகரம்’ என்று ஓர் அருமையான கட்டுரை. அது எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை. அது கிடைக்காமற் போனது பெரிய சோகம். கிடைத்தவற்றை மட்டும் தொகுத்துத் தந்திருக்கிறேன். அவற்றை நூலாக்கித் தர நிவேதிதா பதிப்பகம் முன் வந்திருக்கிறது.
இந்த ஆண்டு என் தந்தையாரின் நூறாவது ஆண்டு. இந்தச் சந்தர்ப்பத்தில், அச்சேறாத தந்தையாரின் நூல்களை எல்லாம் தமிழ் உலகத்துக்கு வழங்கிவிட வேண்டும் என்றும் ஒரு பெரிய ஆர்வம் என்னுள் எழுந்திருக்கிறது. ஆர்வம் என்பதைவிட வேகம், வெறி என்று கூடச் சொல்லலாம் தவறில்லை. நானும் வாழ்வின் ஓரத்துக்கு வந்துவிட்டேன். ஆகவே உடனடியாகச் செய்வதென்று முனைந்துவிட்டேன். நிவேதிதா பதிப்பக உரிமையாளர், வீடுதேடி வந்து என் வேகத்துக்கு மேலும் ஊக்கம் தருகிறார். அழகாக அச்சிட்டுத் தந்திருக்கிறார். அவருக்கு நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு ஆயிரமாயிரம் படையல்கள். இது மேலும் ஒரு படையல். இதனை என் தந்தையின் உடன்பிறவா சகோதரரும், எனக்கு வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுத்து அரவணைத்து வரும் என்றும் என் வணக்கத்துக்கு உரியவருமான கம்பன் அடிபொடி, கவிச்சக்கரவர்த்தியின் தானைத் தளபதி சா. கணேசன் அவர்களின் திருவடிகளில் சேர்ப்பதில் மகிழ்ச்சியும் நிறைவும் பெறுகிறேன்.
இராஜேஸ்வரி நடராஜன்
பாஸ்கர நிலையம்,
சாஸ்திரி நகர்,
சென்னை - 20.