பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

கம்பன் சுயசரிதம்


இலங்கையிலே, கும்பகர்ணனையும், இராவணனையும் முடிக்கிறான். மூல பலத்தையே நிர்மூலம் ஆக்குகிறான். இத்தனையையும் கவிஞன் எத்தனையோ தரம் எப்படி எப்படி எல்லாமோ சொல்லிச் சொல்லி மகிழ்கிறான்.

இதில் எல்லாம் விசேஷம் என்ன என்றால், குன்றாத வலியுடை அரக்கர் தலைவனாம் ராவணன் முதல் நாள் போரில், இராமனிடம் தோற்று, தார்அணி மவுலிபத்தையும், சங்கரன் கொடுத்த வாளையும் வீரத்தையும் களத்திலேயே விட்டு வெறுங்கையோடு இலங்கை புகுந்தவனே, ராமனது வீரத்தைப் புகழ்ந்து புகழ்ந்து போற்றுகிறான். ‘அந்த ராமனால் செய்யமுடியாத காரியம் என்னதான் இருக்கிறது? மேருவைப் பிளக்க வேண்டுமா? விண்கடந்து ஏகவேண்டுமா? பாரினை உருவ வேண்டுமா? பௌவத்தைப் பருக வேண்டுமா? அத்தனையும் செய்யவல்லது அவன் விடும்சரங்கள். அவன் எப்படி வில்லை வளைக்கிறான், நாணேற்றுகின்றான், எப்படி அம்பை எய்கின்றான் என்பதை எல்லாம் யார் கண்டார்கள்? யார் அவன் செய்கை தேர்வார்’ என்று தன் பாட்டனான மாலியவானிடமே சொல்லிச் சொல்லி ஆற்றாது நைகிறான். ‘அடடா! அவன் வில்லினின்றும் எழும் பகழி இருக்கிறதே அதை என்ன சொல்ல’ என்று அலறுகின்றவன் ஒரு கவிஞனாகவே ஆகிவிடுகின்றான்.

நல்இயல் கவிஞர் நாவில்
    பொருள் குறித்து அமர்ந்த நாமச்
சொல்என, செய்யுள் கொண்ட
    தொடை என, தொடையை நீக்கி
எல்லையில் சென்றும் தீரா
    இசை என, பழுது இலாத
பல் அலங்காரப் பண்பே
    காகுத்தன் பகழி மாதோ!

என்பதே அவனது பாராட்டு. வீரனை வியவாத வீரனும் உண்டோ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இந்த