பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

73

வான்மீகியின் ஆதிகாவியத்திலே சிறந்த புருஷனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் பதினாறு என்பர். அதில் முதன்மையாக இருக்கவேண்டியது சீலம் என்று சொல்லுவர். சீலம் என்றால் அரிய பண்பு. பெரிய நிலையில் உள்ளவர்கள், தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களிடத்து அன்பு காட்டி அவர்களையும் அரவணைத்துக் கொள்வதுதான். அந்தச் சீலம் நிரம்பியிருந்தவன் ராமன். சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவாகிய சீதையை மணம் முடித்துக் கொண்டதனால் மட்டும் சீலவானாக அவன் அமையவில்லை. அது அவனுக்குக் கருவிலே வாய்த்த திரு. சக்கரவர்த்தி, திருமகனாகப் பிறந்து வளர்ந்தவன். இளவயதிலேயே, தெருவில் போவோர் வருவோர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் நலன் வினவுவான் என்பான் கம்பன்.

எதிர் வரும் அவர்களை
   எமை உடை இறைவன்
முதிர் தரு கருணையின்
   முக மலர் ஒளிரா
எதுவினை? இடர் இலை?
   இனிதின் நும் மனையும்?
மதி தரு குமரரும்
   வலியர் கொல்?

என்றெல்லாம் விசாரிப்பது கொஞ்சம் வயதுக்கு மூத்த செயலே என்றாலும் சீலம் நிறைந்தது என்பதை மறுக்க முடியாது. இதே சீலமே, பின்னர், கங்கைக் கரையில் உள்ள குகனிடத்தும், கிஷ்கிந்தையில் இருந்த சுக்ரீவனிடத்தும், இன்னும் தன்னோடு தொடர்பு கொள்ளும் எல்லாப் பாத்திரங்களிடத்தும். இப்படி அவன் நடந்து கொள்வதே அவனை ஓர் உத்தமபுருஷன் ஆக்குகிறது. குகனோ வேடன். அவன் செய்கின்ற காரியம் கங்கையைக் கடக்கத் தோணிவிடுதல். இதைத்தான் செய்கிறான் குகன், ராமன், இலக்குவன், சீதை மூவரும் கானகம் செல்லும் வழியில்