உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

87

கொஞ்சம்கூட இல்லாதிருப்பதும் அறியாமை. ஆதலால் நமது அறியாமையையே ஆராதனைப் பொருளாகக் கொண்டு கொட்ட வேண்டியதுதானே. அதைத்தானே செய்கிறான் கம்பன். நம்மையும் செய்யும்படி வற்புறுத்துகிறான். இப்படி கம்பன் ஆராதித்த கோதண்டராமனை அந்த ராமன் ஆராதித்த கருணாகரனைக் காண, கம்பன் சென்ற ஊருக்கே நாமும் செல்ல வேண்டாமா, அந்த ஊர்தான் மதுராந்தகம்.

மதுராந்தகம் செங்கல்பட்டு ஜில்லாவிலே உள்ள தாலுகாவின் தலைநகரம். நிரம்பச் சிறிய ஊரும் அல்ல. நிரம்பப் பெரிய ஊரும் அல்ல. சென்னைக்குத் தெற்கே ஐம்பது மைல் தூரத்திலே இருக்கிறது இந்த ஊர். ரயிலிலும், பஸ்ஸிலும் ஏன் நல்ல காரிலுமே செல்லலாம். வடக்கே இருந்து வந்தாலும், தெற்கே இருந்து வந்தாலும், இந்த ஊருக்கு மேற்கே உயர்ந்த கரையோடு கூடிய பெரிய ஏரி நம் கண் முன் வரும். அந்த ஏரியின் மறுகாலே, கல்லாறு என்ற பெயரோடு ஒரு பெரிய நதியாக ஓடுகிறது என்றால் கேட்பானேன். இந்த ஏரி, தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று. கரையின் நீளம் 12,960 அடி. அதன் நீர்ப்பிடி விஸ்தீரணம் பதின்மூன்று சதுரமைல் ஏரி நீர் நிறைந்தால் நூறு அடிக்கு மேல் ஆழம். ஏரிக்கு ஐந்து மதகுகள். அந்த மதகுகள் வழியாகப் பாய்ந்து பெருகும் தண்ணீர், வளர்பிறை, அருங்குணம், முள்ளி, முள்னத்திக்குப்பம், மதுராந்தகம் முதலிய ஊர்களில் உள்ள 2,702 ஏக்கர் நிலங்களில் மூன்று போகம் நெல் விளையும் நன்செய்களுக்குப் பயன்படுகிறது. இந்த ஏரியின் தண்ணீர் வழிந்தோட அமைந்திருக்கும் கலிங்கல் நூற்று ஐம்பது அடி நீளம் என்றால் ஏரியைக் கொஞ்சம் கற்பனை பண்ணி மானசீகமாகவே பார்த்துக் கொள்ளலாம்தானே. இந்தத் தலத்தில் நாம் முதல் முதல் காண வேண்டுவது, கோதண்டராமன் கோயிலையல்ல, இந்த ஏரியில் உள்ள இந்தக் கலிங்கலைத்தான். ஆம். இந்தக் கலிங்கலில் தானே கோயிலுள் சிலை உருவில் நிற்கும் ராமனும்