92
கம்பன் சுயசரிதம்
மற்றொருவன் கோதண்டராமன். இவர்களிடையே ஒரு பெரிய வேற்றுமை. கோதண்டராமனோ ஏகபத்தினி விரதன். கருணாகரனோ இரண்டு பெண்டாட்டிக்காரன். ஸ்ரீதேவி, பூதேவி சமேதனாக அவன் நிற்கிறான். ஆனால் இந்தக் கருணாகரனே ராமன் வணங்கிய நாராயணமூர்த்தி என்கிறார்கள். கோதண்டராமன் கோயிலுக்கு வலப்பக்கத்திலே ஜனகவல்லித் தாயாரின் கோயில். இதைத்தான் கலெக்டர் லயனல் பிளேஸ் கட்டியிருக்கிறார். இத்தலம் வைஷ்ணவர்களுக்கு மிகவும் உகந்த ஸ்தலம். இங்குதான் ராமானுஜருக்கு பெரியநம்பி, பஞ்ச சம்ஸ்காரம் என்னும் வைஷ்ணவ தீக்ஷை செய்து வைத்திருக்கிறார். அதனால் இது திவ்யம் விளைந்த திருப்பதி என்று கொண்டாடப்படுகிறது. கோயிலின் வட பக்கத்தில் பெரிய நம்பி, ராமானுஜருக்கு எல்லாம் சந்நிதி இருக்கிறது. இருவருக்கும் இடையில் சமீப காலத்தில் திருப்பணி செய்யும்போது பூமியில் இருந்து கிடைத்த நவநீதக் கண்ணன், திருவிலச்சினைக்குரிய சங்கு சக்கரங்கள், பூஜாபாத்திரங்கள், தாமிரத் தட்டு எல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றது. ராமானுஜருக்குத் தீக்ஷை நடந்த இடம் மகிழ மரத்தடியில். அந்த மகிழ மரமும், ஸ்தலப் பெயரான வகுளாரண்யம் என்பதை நிலைநிறுத்த அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. இந்த மகிழடியையே ஸ்ரீவைகுண்ட வர்த்தனம் என்று அழைக்கிறார்கள். கம்பன் கண்ட கருணாகரனை, கோதண்டராமனை இளைய பெருமாளுடன் நிற்பவனைத் தரிசித்துவிட்டு வருவதுடன் பெரியநம்பி, இராமானுஜர், மகிழடி எல்லோரையுமே சேவைசெய்து திரும்பலாம்.
காவேரி தீர ரஸிகன் - இராமன்
நல்ல பங்குனி சித்திரை மாதம். மாலைவேளையில் வீட்டில் இருக்க முடியவில்லை. ஆதலால் காவிரிக் கரைக்குச் சென்று அங்கு ஆற்று மணல் பரப்பிலே அமர்ந்திருந்தேன்.