தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்
93
ஒருநாள். உடன் வந்திருந்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். ஆம், காலை வேளையிலே உலாவப் புறப்பட்டாலும் அந்திவேளையிலே வீட்டில் அமர்ந்திருந்தாலும், நீண்ட பயணத்தை ரயிலில் துவங்கினாலும் என்னுடன் வருபவன் கம்பன்தான். நிரம்பச் சொல்வானேன். இரவு பத்து மணிக்கு உறக்கங்கொள்ளாமல் உருண்டு பிறழும்போது என்னைக் கட்டி அணைப்பவன் கம்பனே. அதாவது, இந்த வேளையில் எல்லாம் ஒன்று நான் கம்பன் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பேன்; இல்லை கம்பராமாயணப் புத்தகம் என்னுடன் வந்து கொண்டிருக்கும். அவ்வளவுதான். அதேபோல அன்றும் நான் கம்பராமாயணப் புத்தகத்தை உடன் எடுத்துச் சென்றிருந்தேன். ஏதோ தனிமையில் இருந்து படிக்கலாம் என்றுதான்.
ஆனால் அங்கு அப்போது மூன்று நண்பர்கள் வந்தார்கள். ஒருவர் பகுத்தறிவுத் தோழர், மற்றொருவர் சிவபக்தர், மூன்றாவது நபர் செஞ்சட்டை வீரர். மூவரும் எனக்கு மிகவும் நன்றாக அறிமுகமானவர்களே, வந்தார்கள். வந்தவர்களை வரவேற்றேன். வணக்கம் செலுத்தி பக்கலில் அமர்ந்தார்கள். கையில் வைத்திருந்த புத்தகத்தைப் பார்த்தார்கள். அவ்வளவுதான். மூன்று பேருக்குமே என்பேரில் கோபம் ஏற்பட்டது. ‘கன்னித் தமிழ்மொழியில் காவியத்தைத் தானெழுத கதை வேறே கம்பனுக்குக் கையில் கிடைக்கலையோ, வடநாட்டு வான்மீகி வன்மமொடு திராவிடரைத் திடமாக இழிவு செயத் தீட்டி வைத்த அக்கதையை, இந்தப் பயல் கம்பன் ஏனோ தமிழருக்காய் சொந்தக் கதையாக்கி சொகுசாய் உரைத்திட்டான். இதைப் படித்துக் கொண்டிருக்கிறீர் நீர்’ என்று என்மேலே பாய்ந்தார் பகுத்தறிவாளர். சிவபக்தரும், ‘எல்லாம் சரிதான், தமிழும் சைவமும் தழைத்து வளர்ந்த இந்தத் தமிழ்நாட்டில் தக்க கதை கம்பனுக்கு வேறு கிடைக்கலையோ, பிறவாத யாக்கை உடைப்பெரியோன் சிவனிருக்க, இறவாப் புகழை எல்லாம் இராமனுக்கே